தமிழ் சினிமா

பார்த்திபனுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள்: 'ஒத்த செருப்பு' படத்துக்கு சேரன் வித்தியாச புகழாரம்

செய்திப்பிரிவு

'ஒத்த செருப்பு' படம் பார்த்துவிட்டு இயக்குநர் பார்த்திபனுக்கு வித்தியாசமான முறையில் புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் சேரன்.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் 'ஒத்த செருப்பு'. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பாராட்டி வந்தார்கள்.

இந்தப் படம் வெளியான சமயத்தில் இயக்குநர் சேரன், 'பிக் பாஸ்' தொடர்பான நிகழ்ச்சிகளிலிருந்தார். இதனால் இப்போது தான் பார்த்துள்ளார். 'ஒத்த செருப்பு' தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் திரைத்துறையில் அறிமுகமாகிச் சரியாக 30 வருடங்கள், இன்னும் முதல் படம் போலவே தன்னை புதுப்பித்துக்கொள்ளும் கலைஞன்.. பெருமிதம் கொள்கிறேன் உங்களோடு என் முதல் பயணம் துவங்கியதில்" என்று கூறி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் இயக்குநர் சேரன், "நீங்கள் ஒத்த ஆளா கிறுக்கிய கவிதை நீங்கள் இன்னும் சினிமா கிறுக்கனாகத்தான் இருக்கிறீர்கள் எனப் பறைசாற்றியது. இந்த பித்தை தெளியவைக்க உங்களுக்குக் கீழ்க்கண்ட மருந்துகள் கொடுக்க வேண்டும்.

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது - 1

சிறந்த நடிகருக்கான தேசிய விருது - 1

காந்திபடம் போட்ட கரன்சி - 1000 மூட்டைகள் (2000 ரூபாய் நோட்டாக)

இதெல்லாம் இவருக்குக் கொடுத்தால் அவரது நோய் இன்னும் பலமடங்காகி இன்னும் நல்ல கிறுக்கல்கள் வரும். hats off sir..

பாடல்களும் பேரிரைச்சல்களும் உதவாத சண்டைக்காட்சிகளிலுமாய் இன்னும் மூழ்கி கிடக்கும் தமிழ் சினிமா சந்தையில் ஒற்றை ஆளாய் உங்கள் மு(அ)கத்தை மட்டும் காண்பித்து இரண்டு மணி நேரம் கட்டிப்போடுவதென்பது.. அசாத்திய முயற்சி..

அதே முதல் மரியாதையுடன்..

உங்கள்

சேரன்

இவ்வாறு சேரன் தெரிவித்துள்ளார்.

சேரனின் இந்த ட்வீட்டை மேற்கொளிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பார்த்திபன், "உள்ளங்கையால் மறைத்த உதய சூரியன் நீங்கள். ஊர் ஒதுக்கித் தள்ள, உந்தி முந்தி எப்படியாவது வெல்ல வேண்டும். நம் இருவருக்கும் பொருந்துமிது! நன்றி!” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

SCROLL FOR NEXT