தமிழ் சினிமா

தங்கர் பச்சான் இயக்கியுள்ள 'டக்கு முக்கு டிக்கு தாளம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

செய்திப்பிரிவு

தங்கர் பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் நடித்து வரும் 'டக்கு முக்கு டிக்கு தாளம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் பிரபலமானவர் தங்கர் பச்சான். தற்போது குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். மீண்டும் தன் மகன் விஜித் பச்சன் நாயகனாக நடிக்கும் படத்தின் மூலம் இயக்குநராகத் திரும்பியுள்ளார் தங்கர் பச்சான்.

முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் முனீஸ்காந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நடித்துள்ளனர். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகி ராம் மூவரும் வில்லனாக நடித்துள்ளனர்.

சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி சுமார் 70 நாட்கள் நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு படத்துக்கு 'டக்கு முக்கு டிக்கு தாளம்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இன்று (அக்டோபர் 10) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்கப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக தரண் குமாரும், ஒளிப்பதிவாளராக பிரபு, தயாளன், சிவபாஸ்கரன் மூவரும் பணிபுரிந்துள்ளனர். பிஎஸ்என் நிறுவனம் தயாரித்து வருகிறது.

SCROLL FOR NEXT