'அக்னிச் சிறகுகள்' படத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் காட்டமாகப் பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்
விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து வரும் படம் 'அக்னிச் சிறகுகள்'. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை 'மூடர் கூடம்' நவீன் இயக்கி வருகிறார். ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.
இதில் சில முக்கியக் காட்சிகள் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளது படக்குழு. இதற்காகப் புதிதாக அக்ஷரா ஹாசனையும் ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. வெளிநாட்டுக்குச் சென்றுள்ள படக்குழுவினருடன் அவரும் சென்றுள்ளார். அக்ஷரா ஹாசன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் ஒப்பந்தமானவர் மீரா மிதுன்.
'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் சர்ச்சை மற்றும் அவரது ஆடியோ பதிவுகள் உள்ளிட்டவை வெளியானதிலிருந்தே மீரா மிதுன் குறித்த செய்திகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் 'அக்னிச் சிறகுகள்' படத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளார்.
அதில், "'அக்னிச் சிறகுகள்' படத்திலிருந்து நான் நீக்கப்பட்டிருக்கிறேன். எனக்குப் பதிலாக யார் நடிக்கவுள்ளார்கள் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். எனக்குத் தேசிய, சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகள் என்றும் உள்ளன. நான் அதை அமைதியாகச் செய்துகொண்டிருக்கிறேன். ஆனால் என்ன ஒரு பாவமான நிலை. தமிழனுக்குத் தமிழ்நாட்டில் வாழ வழியில்லாமல் செய்வது இங்குதான் நடக்கும்.
தொழிலைத் தாண்டி ஏன் தனிப்பட்ட முறையில் என்னை எங்கும் ஏன் தொந்தரவு செய்கிறார்கள். எனது வேலை பற்றிய பதிவுகளைக் கூட சமூக வலைதளங்களில் பகிர விடமாட்டேன் என்கிறார்கள். நான் சமூக வலைதளம் வந்தே இரண்டு நாட்கள் தான் ஆகிறது. இப்போது ஒவ்வொரு மூலையிலிருந்து பிரச்சினை வந்து உளவியல் ரீதியாக என்னை துன்புறுத்துகின்றன.
நான் கோபப்படும் நிலையைத் தாண்டிவிட்டேன். இன்று இது போதும். வருகிறேன் மக்களே. 6 வருடங்கள் ஃபேஷன் துறையில் வெற்றிகரமாக இருந்தேன். 2 வருடங்கள் கோலிவுட்டில் கண்ணியமான பெயருடன் இருந்தேன். இந்த 8 வருடங்களாக என்னைத் தடுக்க முடியாமல் போனவர்கள் இந்த வருடம் எனது பெயரையும் புகழையும் மொத்தமாகக் கெடுக்கத் தேவையான ஆயுதம் ஏந்தியிருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார் மீரா மிதுன்.