கவுண்டமணியைச் சந்தித்துப் பேச ஆவலுடன் இருப்பதாக நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா, காளி வெங்கட், யோகி பாபு, சத்யன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பெட்ரோமாக்ஸ்'. அக்டோபர் 11-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
'சைரா நரசிம்மா ரெட்டி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்தப் படம் வெளியாவதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் தமன்னா. மேலும், இந்தப் படம் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அனந்தோ பிரம்மா' படத்தின் தமிழ் ரீமேக்காகும்.
தாப்ஸி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், "’தேவி’, 'தேவி 2' படங்களுக்குப் பிறகு மீண்டுமொரு பேய் படத்தில் நடிக்க விரும்பவில்லை. ஆனால், இந்தப் படம் 'அனந்தோ பிரம்மா' படத்தின் ரீமேக். இது கொஞ்சம் வித்தியாசமான பேய் படம். எனக்கு 'கண்ணே கலைமானே', 'சைரா நரசிம்மா ரெட்டி' என கொஞ்சம் வலுவான கதாபாத்திரங்களில் நடித்ததற்குப் பிறகு ஒரு காமெடி படத்தில் நடித்தால் வித்தியாசமாக இருக்குமே என நினைத்தேன்.
'பெட்ரோமாக்ஸ்' என்பது கவுண்டமணி - செந்தில் காமெடி குறித்து இயக்குநர் ரோஹின் படப்பிடிப்பு தளத்தில் பேசினார். கவுண்டமணி சாரை சந்தித்துப் பேச ஆவலுடன் உள்ளேன். அது இன்னும் நடக்கவில்லை.
இதில் என்னை முன்னிலைப்படுத்தி போஸ்டர்கள் வடிவமைப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதில் பல நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே பணிபுரிந்துள்ளோம். இது அனைவருடைய படம் என்று சொல்வேன்.
வெறுமன நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என நினைக்கவில்லை. ஏனென்றால் ஒரு வட்டத்தில் சிக்குவது போல் ஆகிவிடும். அதை விரும்பவில்லை. அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க விருப்பம். யாருடைய பயோப்பிக்கிலாவது நடிக்க ரொம்ப ஆசை. ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாக எடுக்கும் போது, அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனே ஒப்புக் கொள்வேன்" என்று தெரிவித்துள்ளார் தமன்னா.