தமிழ் சினிமா

டைட்டிலில் ‘கோகிலா’ மோகன்

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி

எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த மிக முக்கியமான நடிகர்களில் மோகனுக்கு தனியிடம் உண்டு. கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு என பலநடிகர்களும் வெற்றி ஹீரோக்களாக வலம் வந்த காலம் அது.

77ம் ஆண்டு, அக்டோபர் 7ம் தேதி, ‘கோகிலா’ என்ற கன்னடப் படத்தின் மூலமாக இயக்குநர் பாலுமகேந்திராவால் அறிமுகப்படுத்தப்பட்டார் மோகன். கமல், ஷோபா, ரோஜாரமணி முதலானோர் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த ‘கோகிலா’ படம், கன்னடத்தில் மோகனுக்கு நல்ல அடையாளமாகவும் சூப்பர் ஓபனாகவும் திகழ்ந்தது.

அதன் பிறகு, தமிழில் அதே பாலுமகேந்திராவின் மூலமாக அறிமுகம் கிடைத்தது. பானுசந்தர், ஷோபா, பிரதாப் ஆகியோர் நடித்த ‘மூடுபனி’ படத்தில் சிறிய ரோலில் நடித்தார் மோகன். இந்தப் படத்தில், அறிமுகம் ‘கோகிலா’ மோகன் என டைட்டிலில் பெயர் இடம்பெற்றது.

இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருந்தார். இளையராஜா இசை. தன் முதல் படத்தில் இருந்தே இளையராஜாவுடன் இணையவேண்டும் என ஆசைப்பட்டார் பாலுமகேந்திரா. அவர் முதல் படம் பண்ணும்போது இளையராஜாவும் ‘அன்னக்கிளி’ யான முதல் படம் செய்துகொண்டிருந்தார். ‘கோகிலா’, ‘அழியாத கோலங்கள்’ படங்களை அடுத்து மூன்றாவதாக ‘மூடுபனி’ இயக்கினார். அதற்கு இளையராஜாதான் இசை. ‘மூடுபனி’ இளையராஜாவின் நூறாவது படம்.

சரி... மோகனுக்கு வருவோம்.

’மூடுபனி’யில் சின்ன கேரக்டர்தான். போட்டோகிராபர் வேடம். பானுசந்தரும் பிரதாப்பும்தான் பிரதானம். சொல்லப்போனால், பிரதாப்தான் கதையின் நாயகன். போட்டோகிராபராக ஒரு காட்சியில் வருவார் மோகன். அவ்வளவுதான்.

மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில், டைட்டிலில் முதல் பெயராக, அறிமுகம் சுஹாசினி என்று வரும். அதன் பிறகு, சரத்பாபு, கீழே பிரதாப், அடுத்து மோகன் என மூன்று பெயர்களின் ஒன்றன்பின் ஒன்றாக, ஒரே டைட்டிலில், ஸ்க்ரீனில் வரும்.

இதன் பிறகு, துரை இயக்கத்தில் ‘கிளிஞ்சல்கள்’ படத்தில்தான் மோகனின் பெயர் தனியாகவும் வந்தது. முதலாகவும் வந்தது. டி.ராஜேந்தரின் பாடல் மற்றும் இசையில் செம ஹிட்டடித்தன பாடல்கள்.

77ம் ஆண்டு ‘கோகிலா’ ரிலீசானது. 6.11.80 ரிலிசான ‘மூடுபனி’யில் தமிழில், அறிமுகம் ‘கோகிலா’ மோகன் என பெயர் வந்தது. அதே 80ம் ஆண்டு, டிசம்பர் 12ம் தேதி வந்த ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் மூன்று நாயகர்களில், மூன்றாவது நாயகராக மோகனின் பெயர் இடம்பெற்றது. 81ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி வெளியான ‘கிளிஞ்சல்கள்’ படத்தில்தான் மோகனின் பெயர், ஹீரோ அந்தஸ்துடன் தனியாகவும் முதலாகவும் வந்தது.

இதன் பின்னர் வந்த ‘பயணங்கள் முடிவதில்லை’ வெள்ளிவிழா என்று சொல்லப்படும் 175 நாட்களைக் கடந்து டபுள் வெள்ளிவிழா கொண்டாடியது. மோகனும் வெள்ளிவிழா ஹீரோ எனப் பெயர் பெறும் வகையில், பல படங்கள் அமைந்தன.

SCROLL FOR NEXT