ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்படம் 2020-ம் ஆண்டு காதலர் தினத்துக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மான்ஸ்டர்'. இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் எஸ்.ஜே.சூர்யா.
ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை ஏஞ்சல்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தும் வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. காதல் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவாளராகவும், யுவன் இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளனர்.
எடிட்டராக ஆண்டனி பணிபுரியும் இந்தப் படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்துக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
‘மான்ஸ்டர்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்து பைனான்ஸ் சிக்கலில் இருக்கும் 'இறவாக்காலம்' மற்றும் 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய படங்களை வெளியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையும் விரைவில் தொடங்கவுள்ளது.