கோவா திரைப்பட விழாவில் திரையிட 'ஹவுஸ் ஓனர்' தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வருடந்தோறும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழா கோவாவில் நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா நவம்பர் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மொழி திரைப்படங்களுடன் சேர்த்து இந்திய மொழி திரைப்படங்களுடம் திரையிடப்படும்.
இதில் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்படும் இந்திய மொழிப் படத்துக்கு தேசிய விருது நிச்சயம் என்று நம்புவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடத் தமிழிலிருந்து 2 படங்கள் தேர்வாகியுள்ளன.
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான 'ஒத்த செருப்பு' மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான 'ஹவுஸ் ஓனர்' ஆகிய படங்களும் இம்முறை திரையிடப்படவுள்ளன. இதில் 'ஹவுஸ் ஓனர்' தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறித்து, அந்தப் படத்தின் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில், "’ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் வசூல் ரீதியாக ஏமாற்றம் தந்ததும் எனக்குள் பல சந்தேகங்கள் எழுந்தன.
படம் (கோவா சர்வதேச திரைப்பட விழாவில்) இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்படும் செய்தி மிகப்பெரிய ஊக்கமாக இருக்கிறது. விழாத் தலைவருக்கும், நடுவர் குழு உறுப்பினர்களுக்கும் என் நன்றிகள். தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் நடிகர், நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.