பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியவர் வனிதா விஜயகுமார் என்று தனது ட்விட்டர் பதிவில் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
2017-ம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் ஆரவ், சிநேகன், ஹரிஷ் கல்யாண், கணேஷ் வெங்கட்ராம், ஓவியா, ஜூலி, ரைசா உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாகக் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்றவராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.
2018-ம் ஆண்டில் பிக் பாஸ் 2-வது சீசன் ஒளிபரப்பானது. அதில் ருத்விகா வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
தற்போது 3-வது சீசன் முடிந்தது. இதில் வெற்றியாளராக முகின் ராவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் போட்டியாளராக உள்ளே சென்றவர் வனிதா விஜயகுமார். எப்போதுமே கோபத்துடனே பேசுகிறார், இவரால் தான் பிரச்சினையே என்றெல்லாம் வனிதா விஜயகுமார் குறித்து இணையத்தில் மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பலரும் கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.
தற்போது வனிதாவால் மட்டுமே 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருந்ததாக பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதில், "வனிதாவுக்குப் பாராட்டுகள். அவர் தான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வைத்தார். அவரைத் தனியாகக் குறிப்பிட்டு சொல்லியிருக்க வேண்டும். நல்லதோ கெட்டதோ, அவர்தான் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கினார் என்பதில் சந்தேகமில்லை.
சாண்டி எங்கு சென்றாலும் அங்கு மிளிர்வார். அவர் எப்போதுமே ஒரு வெற்றியாளர். பிக் பாஸ் 3-யிலும் மக்கள் மனதில் மட்டுமல்ல. எங்கும் அவர் ஜொலிப்பார். அவரை எனக்குத் தெரியும். அவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இன்னும் பெரிய மேடையில் நடன அமைப்பாளராகவோ, நடிகராகவோ அவர் வெற்றி பெற விரும்புகிறேன். நல்ல திறமைசாலி.
ராஜ்கமல் ஃபிலிம்ஸில் ஒப்பந்தம் கையெழுத்திட்ட தர்ஷனுக்கு அற்புதமான வாய்ப்பு. இளம் திறமைகளை ஆதரிக்கும் அற்புதமான செயலுக்கு கமல்ஹாசனுக்கு நன்றி.
முகின் வெற்றியாளர். கண்ணியமான இளைஞர். பிக்பாஸ் 1-ல் கண்ணியமானவரான கணேஷை எனக்கு ஞாபகப்படுத்தினார். இவ்வளவு இளம் வயதில் இருக்கும் ஒருவர் இன்று இவ்வளவு மென்மையாக இருப்பதைப் பார்ப்பது கடினம். பெண்கள் பாதுகாப்பு, பெண்களை மதிப்பது எனப் பல இளைஞர்களை இவரைப் பின்பற்றுவார்கள் என நம்புகிறேன். பாராட்டுகள் முகின். எனது இரண்டு தேர்வுகளும் வென்றதில் மிக்க மகிழ்ச்சி.
டைட்டில் வெற்றிபெற்ற முகின் இரண்டாம் இடம் பெற்ற சாண்டி இருவருக்கும் வாழ்த்துகள். நல்ல, பொழுதுபோக்காக சீசனைக் கொண்டு சென்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்” என்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.