பெற்றோர் சம்மதத்துடன்தான் என் திருமணம் நடைபெறும் என்று பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட லாஸ்லியா தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் 3-வது சீசன் விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்தது. 105 நாட்கள் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரை அறிவிக்கும் நிகழ்ச்சி அக்டோபர் 6-ம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 2-ம் இடத்தை சாண்டியும், 3-வது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். இறுதிப் போட்டி நெருங்கி வரும் நேரத்தில், பத்திரிகையாளர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். அப்போது முகின், சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரீன் ஆகியோர் போட்டியாளர்களாக வீட்டிற்குள் இருந்தனர்.
அந்தச் சந்திப்பின் போது பத்திரிகையாளர் மத்தியில் லாஸ்லியா பேசியபோது, "இலங்கையைச் சேர்ந்த நான் கனடாவில் வளர்ந்தேன். புதுமுகமாகத்தான் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தேன். தமிழக மக்களின் ஆதரவால் இப்போது பிரபலமாகி இருக்கிறேன். இனி தொடர்ந்து தமிழகத்தில் இருக்கவே விருப்பம். இங்குள்ள மக்கள், உறவுகள் என் மீது அதிக பாசத்துடன் இருப்பார்கள் என நம்புகிறேன்.
என் அப்பா வீட்டுக்குள் வந்தது, பேசியது பெரிதாகிவிட்டது. அவர் என்ன பேசினாலும், என் அப்பா. எங்களுக்குள் எந்த உறவுச் சிக்கலும் கிடையாது. என் நன்மைக்காகவே அவர் பேசியுள்ளார். அவரது சமூகம் அவரை எப்படி நடத்தியது? எனத் தெரியவில்லை. அவர் ரொம்ப பாசமாக இருப்பார். என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். நாங்கள் இப்படித்தான் காதலித்தோம் எனச் சொல்லிச் சொல்லிதான் எங்களை வளர்த்தார்கள். ஆனாலும் பெற்றோர் சம்மதத்துடன்தான் என் திருமணம் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார் லாஸ்லியா.
பிக் பாஸ் வீட்டிற்குள் கவின் - லாஸ்லியா இருவரும் காதலித்து வந்தனர். அந்தச் சமயத்தில் லாஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போது, லாஸ்லியாவைத் திட்டியது உள்ளிட்ட விவகாரங்கள் இணையத்தில் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.