தமிழ் சினிமா

அன்பால் அரவணைத்த தமிழ்நாடு எனக்கு இன்னொரு வீடு: முகின் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

அன்பால் அரவணைத்த தமிழ்நாடு எனக்கு இன்னொரு வீடு என்று 'பிக் பாஸ் 3'-ல் வெற்றிபெற்ற முகின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் சீசன்-3 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்தது. நேற்று (அக்டோபர் 6) இதன் வெற்றியாளர் யார் என்பதற்கான இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவருக்கு 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 2-ம் இடத்தை சாண்டியும், 3-வது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். முகின் வெற்றி பெற்றதை அவரது நண்பர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவுடன் 'பிக் பாஸ் 3' மேடையில் முகின் பேசியதாவது:

"மிகப்பெரிய நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும் ரொம்ப நன்றி. மலேசியாவுக்கு ரொம்பவே நன்றி. ஏனென்றால் பாட்டுப் பாடி முயற்சி செய்து கொண்டிருந்தபோது உறுதுணையாக இருந்தார்கள். எந்தவொரு தருணத்திலும் அவர்கள் விட்டுக் கொடுத்ததில்லை. பிக் பாஸ் வரும் வரைக்கும் ரொம்ப உறுதுணையாக இருந்தார்கள்.

அவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்ததால் மட்டுமே, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன். அன்பு ஒன்றும் அனாதையில்லை, அன்புக்கு நான் இருக்கேன்டா எனச் சொல்ல நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். என்னை அன்பால் அரவணைத்த தமிழ்நாடு எனக்கு இன்னொரு வீடு.

பெரியவர்களின் ஆசிர்வாதம், மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு, என் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை. இதெல்லாமே எனது பலம். அதற்கு மேல் நான் யார் என்பதை எனக்கும் காட்டி உங்களுக்கும் காட்டியது இந்த பிக் பாஸ் ஷோ. இது எனக்கு இப்போது இன்னொரு கிரீடம். வாழ்க்கையில் இனிமேல் தோற்கக் கூடாது என முடிவு பண்ணியிருக்கேன். அந்த முடிவை நீங்களும் எடுங்கள். எப்போதுமே வாழ்க்கையில் ஜெயிக்கலாம்".

இவ்வாறு முகின் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT