நான் நினைப்பதை உலகம் அறிய வேண்டாம் என்று நயன்தாரா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியளவில் மிகப் பிரபலமான இதழ் 'வோக்'ல் இதன் அட்டைப்படத்தில் போட்டோ ஷுட் உடன் பேட்டிகள் வருவதை திரையுலக பிரபலங்கள் பலரும் விரும்புவார்கள். இதில் தென்னிந்திய நாயகிகளின் பேட்டிகள் பெரிதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில்லை. முதன் முறையாக இதில் தென்னிந்திய நாயகிகளில் முதன்மையானவராக இருக்கும் நயன்தாராவின் பேட்டி இடம்பெற்றுள்ளது.
எப்போதுமே தான் நடிக்கும் படங்களின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி என எதிலுமே கலந்து கொள்வதில்லை நயன்தாரா. நீண்ட வருடங்கள் கழித்து 'வோக்' நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், பல கேள்விகளுக்கு மனம் திறந்து பேசியுள்ளார் நயன்தாரா.
ஏன் பேட்டிகள் அளிப்பதில்லை என்ற கேள்விக்கு நயன்தாரா, "நான் என்ன நினைக்கிறேன் என்பதை இந்த உலகம் அறிய வேண்டாம். நான் தனிமை விரும்பி. கூட்டங்களை என்னால் கையாள முடியாது. பல முறை நான் பேசியது தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் எதிர்வினைகளை என்னால் கையாள முடியவில்லை. என் வேலை நடிப்பது. படங்களே (என் திறமை பற்றி) பேசும்" எனப் பதிலளித்துள்ளார்.
தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் 'நெற்றிக்கண்' படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.