தமிழ் சினிமா

எப்போதுமே ஒரு பயத்தில் இருக்கிறேன்: மனம் திறக்கும் நயன்தாரா

செய்திப்பிரிவு

எப்போதுமே ஒரு பயத்திலேயே இருக்கிறேன் என்று நயன்தாரா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தான் நடிக்கும் படத்தில் எந்தவொரு இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே கலந்து கொள்ளமாட்டார். ஆனால், தன் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், நயன்தாரா பேட்டி என்பது அரிதினும் அரிதானது.

சமீபத்தில் இவரைப் பற்றி ராதாரவி பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதுவே, அவர் வெளியிட்ட கடைசி அறிக்கையாகும். தன்னைப் பற்றி எந்தவொரு செய்திக்கும் அவர் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமுமே வராது.

தற்போது நீண்ட வருடங்கள் கழித்து, பிரபலமான இதழான 'வோக்' இதழுக்குப் பேட்டியளித்துள்ளார் நயன்தாரா. அதிலும் ஒரு சாதனை செய்துள்ளார். என்னவென்றால், தென்னிந்திய நாயகிகளில் இவரது புகைப்படம் மற்றும் பேட்டி தான் முதன் முதலில் 'வோக்' இதழில் இடம்பெற்றுள்ளது.

தொடர்ச்சியாகத் தன்னை முன்னிலைப்படுத்தி வரும் கதைகளிலும், நாயகியாகவும் நடித்து வருவது குறித்து, "ஏன் இன்னும் சில நாயகர்களின் படத்தில் கவர்ச்சியான கதாநாயகியாக நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். சில நேரங்களில் வேறு வழி இல்லை. எவ்வளவு நாட்கள் தான் முடியாது என்று என்னால் சொல்ல முடியும். நான் ரிஸ்க் எடுக்கத் துணிபவள்" என்று தெரிவித்துள்ளார் நயன்தாரா.

முன்னணி நாயகியாக இருப்பது குறித்த கேள்விக்கு, "வெற்றியை என் தலைக்கேற விட மாட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் எப்போதுமே ஒரு பயத்தில் இருக்கிறேன். சரியான படத்தைக் கொடுக்கமாட்டேனோ என்ற பயத்திலேயே வாழ்கிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா

SCROLL FOR NEXT