'சித்தி 2' என்ற பெயரில் ராதிகா நடிப்பில் புதிய சீரியல் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் ராதிகா, சிவகுமார், தீபா வெங்கட், யுவராணி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஒளிபரப்பான சீரியல் 'சித்தி'. சன் தொலைக்காட்சியில் ப்ரைம் டைம் எனப்படும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற சீரியலாகும்.
467 எபிசோட்கள் ஒளிபரப்பான இந்த சீரியலின் அறிமுகப் பாடலான 'கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா' என்ற பாடல் இப்போதும் பலரது மொபைலில் காலர் டோனாக இருக்கிறது. நீண்ட வருடங்கள் கழித்து, தற்போது 'சித்தி 2' சீரியல் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளார் ராதிகா.
சுந்தர் கே.விஜயன் இயக்கி வரும் இந்த சீரியலில் ராதிகாவுடன் பொன்வண்ணன், டேனியல் பாலாஜி, ரூபினி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதுவும் சன் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாகவுள்ளது. தற்போது இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக விரைவில் காரைக்குடிக்குப் பயணிக்கவுள்ளனர்.
சீரியல் ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.