தமிழ் சினிமா

ரஜினி - சிவா சந்திப்பு: விரைவில் கூட்டணி அறிவிப்பு!

செய்திப்பிரிவு

ரஜினியைச் சந்தித்து இயக்குநர் சிவா இறுதிக்கட்ட கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தக் கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக, சிவாவின் இயக்கத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும், ஏ.ஆர்.முருகதாஸும் அடுத்ததாகக் கதையொன்றை ரஜினியிடம் கூறியுள்ளார். இடையே இயக்குநர் சிவாவோ ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்காக சூர்யா நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். இதனால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலேயே மீண்டும் ரஜினி நடிப்பார் எனத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், தற்போது இயக்குநர் சிவா இயக்கத்திலேயே நடிக்க முடிவு செய்துள்ளார் ரஜினி. சிவா கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, நேற்று (அக்டோபர் 4) இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ரஜினி. இதனால் இந்தக் கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது. ரஜினி - சிவா இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தன் பிறந்த நாளுக்கு முன்பாக படப்பிடிப்புக்குச் செல்லலாம் என்று ரஜினி கூறியுள்ளார். அதற்குத் தகுந்தாற் போல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது படக்குழு. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT