தமிழ் சினிமா

இணையத்தில் வைரலான 'இளைய சூப்பர் ஸ்டார்' பட்டம்: திரையரங்க நிர்வாகம் விளக்கம்

செய்திப்பிரிவு

தனுஷுக்கு 'இளைய சூப்பர் ஸ்டார்' பட்டம் வைரலானது தொடர்பாக ராம் சினிமாஸ் திரையரங்க நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அசுரன்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தாணு தயாரித்துள்ளார். நேற்று (அக்டோபர் 4) வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, பல்வேறு படங்கள் வெளியாகியுள்ளதால், வசூல் ரீதியாக எப்படி என்பது விரைவில் தெரியவரும்.

இந்தப் படம் வெளியாவதை ஒட்டி, தனுஷ் ரசிகர்கள் பேனர்கள் எதுவும் வைக்கவில்லை. போஸ்டர்களை மட்டும் உருவாக்கினர். திரையரங்க வாசலில் பலூன்களில் தோரணம் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். நேற்று (அக்டோபர் 4) தமிழகமெங்கும் 'அசுரன்' முதல் காட்சி ரசிகர்களுக்கான காட்சியாகத் திரையிடப்பட்டது.

இதில் திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸ் திரையரங்கில் ரசிகர்கள் காட்சி திரையிடப்பட்டபோது, அங்குள்ள கொண்டாட்டத்தைப் புகைப்படம் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பகிர்ந்தார்கள். அதில் 'இளைய சூப்பர் ஸ்டார்' தனுஷ் என்று இடம்பெற்றிருந்தது. முதல் பதிவாக இது இருந்ததால், பலரும் படத்தில் 'இளைய சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் தனுஷுக்குக் கொடுத்துள்ளனர் எனத் தகவல் பரவியது.

ஆனால், படத்தில் வெறும் தனுஷ் என்றே இடம்பெற்றிருந்தது. ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காகத் திரையரங்க நிர்வாகம் தயார் செய்த வீடியோவில் தான் 'இளைய சூப்பர் ஸ்டார்' தனுஷ் என இடம்பெற்றிருந்தது. இந்தப் பட்டம் விவகாரம் இணையத்தில் பேசுபொருளாக உருவானதைத் தொடர்ந்து ராம் சினிமாஸ் நிர்வாகம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், "அந்த டைட்டில் கார்டு 'அசுரன்' படத்தில் இடம்பெற்றதல்ல. தனுஷ் ரசிகர் மன்றத்தினால் உருவாக்கப்பட்ட சிறப்பு வீடியோவில் இடம்பெற்றிருப்பது. ரசிகர்களை எங்கள் இடத்தில் கொண்டாட விரும்புகிறோம். வெளியூர்களிலிருந்தும் ரசிகர்கள் இங்கு வருகின்றனர். அவர்களை முழுமையாகத் திருப்தி செய்வதே எங்கள் நோக்கம் மற்றும் இலக்கு” என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT