சரண் இயக்கத்தில் ஆரவ் நடித்துள்ள 'மார்க்கெட் ராஜா MBBS' திரைப்படம் நவம்பர் 8-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
வினய் நடித்த 'ஆயிரத்தில் இருவர்' படத்துக்குப் பிறகு, தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் சரண். அக்கதையில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் நாயகனாக நடிக்க முன்வந்தார்.
'மார்க்கெட் ராஜா MBBS' என்று தலைப்பிட்டுள்ள இந்தப் படத்தில் நாசர், யோகி பாபு, பிரதீப் ராவத், சாயாஜி ஷிண்டே, நிகிஷா படேல், தேவதர்ஷினி, சாம்ஸ், ஆதித்யா மேனன், முனீஷ்காந்த் ராமதாஸ், ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பலர் ஆரவ்வுடன் நடித்துள்ளனர். ஆரவ் அம்மாவாக ராதிகா ‘சுந்தரி பாய்’என்ற லேடி தாதாவாக நடித்துள்ளார்.
சென்னையிலேயே முழுப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சுரபி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சைமன் கே.கிங் இசையமைக்க, கே.வி.குகன் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார்.
தற்போது இந்தப் படம் நவம்பர் 8-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கான படங்கள் அனைத்தும் வெளியானவுடன், 'மார்க்கெட் ராஜா MBBS' வெளியீட்டை உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.