தமிழ் சினிமா

இரண்டு தொடர்கள்

செய்திப்பிரிவு

விஜய் டிவியில் வரும் 7-ம் தேதி முதல் இரு புதிய தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன.

காற்றின் மொழி: இது காதல் கலந்த குடும்ப நெடுந்தொடர். பேசும் திறனற்ற ‘கண்மணி’யால் குடும்பத்துக்கு துரதிர்ஷ்டம் என்று ஜோதிடர் சொன்னதால், அவளை விலக்கி வைக்கின்றனர் குடும்பத்தினர். அவளது குழந்தைப் பருவ நண்பனான சந்தோஷ், அமெரிக்காவில் படிப்பை முடித்து திரும்புகிறான். கண்மணியின் குணம், அழகில் மயங்கி அவளை காதலிக்கிறான். கண்மணியோ அப்பாவின் அன்பு போதும் என்று கருதுகிறாள். கண்மணி மனதில் சந்தோஷ் இடம்பிடிப்பானா? என்பது களம். சந்தோஷாக சஞ்சீவ், கண்மணியாக பிரியங்கா மற்றும் மனோகர், அணிலா ஆகியோர் நடிக்கின்றனர்.

தாழம்பூ: இது நாகலோகப் பின்னணி கொண்ட தொடர். நாகலோகத்தின் தலைவர் நாகயோகியின் மகள் வாசுகி. இளம் போர் வீரன் நாகா. இவர்கள் இருவரும் நிச்சயம் ஆனவர்கள். நாகலோகத்தில் இருந்து தொலைந்துபோன ஆத்மலிங்கத்தை மீட்க மானிடனாக மாறி பூலோகம் வருகிறான் நாகா. லிங்கத்தை வைத்து பூஜிக்கும் ரேவதி என்ற பெண்ணுடன் பழகுகிறான். அவன் பாம்பு என்று அவளுக்கு தெரியவருகிறதா? என்பது களம். இதை ராஜீவ் மேனனின் உதவியாளர் சண்முகம் இயக்குகிறார்.

SCROLL FOR NEXT