ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் ‘நிறம் மாறாத பூக்கள்’ தொடர் அடுத்த வாரம் 500-வது அத்தியாயத்தை கடக்கிறது. நடிகை நீலிமா தயாரிப்பில் வெளிவரும் இத்தொடரில் கீர்த்தி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பெங்களூருவை சேர்ந்த நிஷ்மா செங்கப்பா.
‘‘இதில் நடிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட 2 வருஷம் ஆச்சு. இந்த தொடருக்குள் வந்த பிறகுதான் தமிழ் பேச கத்துக்கிட்டேன். இப்போ எனக்கு நானே டப்பிங் பேசும் அளவுக்கு தமிழில் எல்லா வார்த்தைகளும் அத்துபடி ஆகிடிச்சு. ஆனா, எனக்கு டப்பிங் பேசுறவங்க நல்லா செட் ஆகிட்டதால அதை மாற்ற வேண்டாம்னு தோணுது. ஆரம்பத்தில் செல்லப் பெண்ணாக வந்த நான் ஒரு கட்டத்தில் மெயின் வில்லியாக மாறிட்டேன். அது ரசிகர்களுக்கும் பிடித்திருந்ததால் அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டோம். தமிழில் ‘நிறம் மாறாத பூக்கள்’ தொடரில் நடிக்கும்போதே, தெலுங்கில் ‘சாவித்ரி’ என்ற தொடர் அமைந்தது. இப்போ அது முடிந்துவிட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில் வந்த சில தமிழ் கதைகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. சொந்த ஊரான கன்னடத்தில் சில வாய்ப்புகள் வருகின்றன. அங்கு நடித்தால், வீட்டில் இருந்து படப்பிடிப்புக்கு போகணும். அது சுத்த போர். எனக்கு வெளியூர்ல சுதந்திரமா தங்கி நடிக்கணும், சாப்பிடணும், பயணிக்கணும். அதனாலதான் சொந்த ஊர் வாய்ப்புகளை ஏற்பதில்லை. குறைந்தபட்சம் இப்போ நடிக்கிற தொடர் போல இருக்க வேண்டும் என்று தமிழ் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கேன்’’ என்கிறார் நிஷ்மா.