'அக்னிச் சிறகுகள்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அக்ஷரா ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து வரும் படம் 'அக்னிச் சிறகுகள்'. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை 'மூடர் கூடம்' நவீன் இயக்கி வருகிறார். ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.
இந்தப் படத்தில் இந்தியாவில் எடுக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்தது படக்குழு. அதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகளுக்கான முன் தயாரிப்பு பணிகளைத் தொடங்கியது. இதற்கு இடையே விஜய் ஆண்டனி, அருண் விஜய் இருவருமே தங்களது மற்ற படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள்.
தற்போது மாஸ்கோவில் 50 நாட்கள் படப்பிடிப்புக்காக 'அக்னிச் சிறகுகள்' படக்குழு கிளம்பியுள்ளது. இதில் படத்தின் பிரதான காட்சிகளுடன், பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்கவுள்ளனர். மேலும், இந்தப் படத்துக்காக தற்போது அக்ஷரா ஹாசனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரும் மாஸ்கோ படப்பிடிப்புக்காகப் படக்குழுவினருடன் சென்றுள்ளார்.
தமிழில் அஜித்துடன் 'விவேகம்' மற்றும் விக்ரமுடன் 'கடாரம் கொண்டான்' ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் தான் அக்ஷரா ஹாசன் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.