லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சாந்தனு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'பிகில்' படத்தைத் தொடர்ந்து, விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொடங்கவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி மற்றும் ஆண்டனி வர்கீஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்களைக் கடந்த இரண்டு நாட்களாக அறிவித்து வருகிறது 'தளபதி 64' படக்குழு.
இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 3 மணி மற்றும் 6 மணி என இரண்டு அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி விஜய்யுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சாந்தனு நடிக்கவுள்ளதைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதில் சாந்தனு கல்லூரி மாணவராகவும், விஜய் கல்லூரிப் பேராசிரியராகவும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் தீவிர ரசிகராக சாந்தனு வலம் வருவது குறிப்பிடத்தக்கது. சாந்தனுவின் திருமணத்தை விஜய்தான் தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தார் என்பது நினைவு கூரத்தக்கது. முதல் முறையாக இப்போது தான் விஜய்யுடன் நடிக்க சாந்தனு ஒப்பந்தமாகியுள்ளார்.
படப்பிடிப்பு எப்போதும் தொடங்கும் என்பதை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.