தமிழ் சினிமா

'ஹீரோ’ தலைப்பால் மீண்டும் சர்ச்சை: கே.ஜே.ஆர் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' படத்தின் தலைப்பால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கே.ஜே.ஆர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. டிசம்பர் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பூஜை போடப்பட்ட அன்றே, தலைப்புக்கான சர்ச்சை வெடித்தது. ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தத் தலைப்புக்கு, தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்கே உரிமை கொடுத்திருப்பதாக அறிவித்தது. ஆனால், கே.ஜே.ஆர் நிறுவனமோ தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடிதத்தையும் வெளியிட்டது. இதனால் தலைப்பு யாருக்கு என்பதில் சர்ச்சை நீடித்தது.

ஆனால், சிவகார்த்திகேயன் படம் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதனால் தலைப்பு பிரச்சினை பேசி முடிக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. இந்நிலையில், ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் கே.ஜே.ஆர் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "'ஹீரோ' என்ற எங்களது தலைப்பில் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான செய்திகள் பத்திரிகை, தொலைக்காட்சி, மற்றும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

இந்தச் சூழலில் சில மாதங்களாகத் தமிழ் மொழியில் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் 'ஹீரோ' என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை வைத்து படம் தயாரிப்பதாகச் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.

இதனைக் கண்டு தயாரிப்பாளர் சங்கத்தை நாங்கள் அணுகிய போது, அவர்கள் கடந்த 16 ஏப்ரல் 2019 அன்று எங்களது தலைப்பினைப் பயன்படுத்திவரும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு இப்படத்தின் தலைப்பினை பயன்படுத்தக் கூடாது என்று கெளரவச் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பி வைத்து, கடிதத்தின் நகலையும் எங்களுக்குக் கொடுத்து உறுதி அளித்தார்கள்.

ஆனால் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம், தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி (02.09.2019) அன்று பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் 'ஹீரோ' என்ற தலைப்பில் போஸ்டர்களை வெளியிட்டனர். ஆகவே இந்தக் கடிதத்தின் வாயிலாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தலைப்புப் பிரச்சினையில், தயாரிப்பாளர் சங்கமும் சம்பந்தப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கெளவரச் செயலாளராக இருந்த எஸ்.எஸ்.துரைராஜ், "இது முழுக்க எழுத்தர் செய்த தவறினால் நடந்துள்ளது. தலைப்பு ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கே சொந்தம்" எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தையும் ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT