கா.இசக்கி முத்து
ஊட்டச்சத்து நிபுணர், அரசு மருத்துவமனைகளில் ஆராய்ச்சி, உலகின் மிகப் பெரிய மதிய உணவுத் திட்டமான அக்ஷயபாத்திராவின் விளம்பரத் தூதுவர். world vision அமைப்புடன் இணைந்து கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவது, ஈழத்தமிழர்களுக்காக வைட்டமின் தெரபி பற்றிய பயிற்சி என பணிபுரிந்து வருபவர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். அவருடைய பணிகள் குறித்தும், அடுத்தகட்ட திட்டங்கள் குறித்தும் உரையாடியதிலிருந்து...
அரசு மருத்துவமனைகளில் ஆராய்ச்சி செய்து வருகிறீர்களாமே. என்ன ஆராய்ச்சி?
குறைந்த வருமானத்தில் வாழ்பவர்கள் கூட ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களாக மருத்துவர்கள் இருக்க வேண்டும். அதற்குச் செயல்பட வேண்டும். ஊட்டச்சத்து நிபுணராகத் தமிழ்நாட்டில் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எனக்கு நானே வாய்ப்புகள் உருவாக்க முடிவு பண்ணினேன். அதன் அடிப்படையில்தான் அரசு மருத்துவமனைகளில் ஆராய்ச்சியைத் தொடங்கினேன்.
இங்கு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, இரும்புச்சத்து குறைபாடு ஐந்தில் இரண்டு பெண்களுக்கு உள்ளது. அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகள் இருக்கும் தரை, சுவர் என எதுவுமே சுத்தமாக இல்லை. அவற்றை முதலில் சுத்தமாக வைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இதன் மூலம் நோய் பரவாமல் தடுக்க முடியும். அதே போல், அரசு மருத்துவமனைகளில் தலையணைகள் மற்றும் போர்வைகள் போதுமான அளவில் இல்லை. அதற்கு வழிவகை செய்ய வேண்டும். மழைக்காலத்தில் வரும் நோய்களைத் தடுக்க தரமான ஊசிகள் நிறைய இருக்க வேண்டும்.
இது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடமில்லை என்கிறீர்களா?
கண்டிப்பாக இல்லை. ஆராய்ச்சி செய்து வருவதால் பலரிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் பலரும் ஊசி போட்டால் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். அது தான் இல்லை. உதாரணமாக, மருந்துக் கடைகளில் மருந்துகள் வாங்கும் போது அது காலாவதியாகிவிட்டதாக என்று எத்தனை பேர் பார்த்து வாங்குகிறோம். மக்கள் அனைவரும் குழந்தைகளுக்கு வாங்கும் டயப்பர், பால் ரப்பர், ஷாம்பூ, பவுடர் ஆகியவற்றுக்காவது காலாவதியைத் தேதியைப் பார்த்து வாங்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். அதே போல் மருந்துக் கடைகள் வைத்திருப்பவர்களுக்கும் ஒரு விண்ணப்பம். மக்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தில் மருந்து வாங்குகிறார்கள். அவை காலாவதியாகிவிட்டால், அப்புறப்படுத்த வழிவகை செய்யுங்கள். மருத்து விலை குறையவில்லை ஏறிக் கொண்டு தான் போகிறது. நம்பி வரும் மக்களைத் தயவு செய்து ஏமாற்றாதீர்கள்.
அப்படியென்றால் சுகாதாரத் துறை சரியாக இயங்கவில்லை என்கிறீர்களா?
ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானது இரண்டு. உடல் ஆரோக்கியம் மற்றும் பணம். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் கடினமாக உழைக்க முடியும். கடினமாக உழைத்தால்தான் பணம் சம்பாதிக்க முடியும். ஆரோக்கியமான வாழ்வு வசதி உள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பதில் நியாயமில்லை. தனியார் மருத்துவமனையில் நோயாளிகள் வருவாய் உருவாக்கும் இயந்திரங்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். மருத்துவமனைக்குச் சென்றால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை மக்களிடமில்லை. மருத்துவமனைக்குச் செல்வதை நினைத்துப் பயப்படுகிறார்கள். நம் சுகாதார அமைப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தர வேண்டும். இங்கு ஐந்து வயதிற்குக் கீழ் இருக்கும் குழந்தைகளில் 39.4% குழந்தைகளுக்கு போதுமான வளர்ச்சி இல்லை. 12 மாதத்திலிருந்து 23 மாதத்திற்குள் இருக்கும் குழந்தைகளில் 62% குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இது தொடர்பாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை விரைவில் சந்தித்து என் கருத்துகளை எடுத்துரைக்கவுள்ளேன்.
ஆராய்ச்சி செய்வது, மக்களுக்காகக் குரல் கொடுப்பது, அமைச்சரைச் சந்திப்பது, பிரதமருக்குக் கடிதம் எழுதுவது. இதெல்லாம் பார்த்தால் விரைவில் உங்களை அரசியலில் எதிர்பார்க்கலாமா?
கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். எப்போது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. இங்கு தண்ணீர் பிரச்சினையில் ஆரம்பித்து பல பிரச்சினைகள் உள்ளன. அரசியல்வாதிகள் பேனர் வைப்பதிலும், போஸ்டர் ஒட்டுவதிலும் காட்டும் கவனத்தைவிட மக்கள் தேவை என்ன என்பதைப் புரிந்து செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும். என் அப்பாவிற்கு எனக்கும் தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அமெரிக்க நிறுவனம் என் க்ளினிக்கிற்கு வந்து தகராறு செய்தபோதும் எனக்கு ஆதரவு கொடுத்தார்கள். அவர்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். ஒரு அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றால் நாம் அந்த அமைப்பிலிருந்தால்தான் சாத்தியம். மக்கள் தேவைகளைப் புரிந்துகொள்ள களப்பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகிறது.
உங்களுடைய அரசியல் ஆசை அப்பாவுக்குத் தெரியுமா?
அவருக்குத் தெரியும். என் அப்பா என் உயிர்த் தோழன். என் அப்பாவும், அம்மாவும் எனக்கு எப்போதுமே உறுதுணையாகவே இருப்பார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயம். எப்போதுமே சுயமாகக் களத்தில் நின்றே பழக்கப்பட்டவள். ஒரு ஊட்டச்சத்து நிபுணராக என் பயணத்தை ஆரம்பித்தபோது அப்பாவின் பெயரையும், பணத்தையும் என் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தியதில்லை. அப்பாவுடைய பெயர், புகழ், பணம் இவற்றை என் அரசியல் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த மாட்டேன்.
உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர்கள்?
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், நல்லகண்ணு ஐயா
என் குழந்தைகள் நேர்மையானவர்கள். கடினமான உழைப்பாளிகள். அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும், அதை நானும் என் மனைவியும் ஆதரிப்போம். சுயமாகச் சிந்தித்து, சுதந்திரமாக முடிவெடுக்க அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நான் தடையாக இருக்க மாட்டேன். என் மகளைத் தைரியமான பெண்ணாகவும், துணிச்சலான பெண்ணாகவும் வளர்த்திருக்கிறேன். திவ்யா எந்த பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் உள்ள நல்லதும், கெட்டதும் சொல்லி ஒரு தகப்பனாகவும், நல்ல நண்பனாகவும் என் மகளுக்குப் பக்கபலமாக இருப்பேன்.