தமிழ் சினிமா

சிவாஜி இல்லாமையை ஏற்க முயன்று வருகிறோம்: கமல் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

சிவாஜி கணேசன் இல்லாமையை ஏற்க முயன்று வருகிறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இன்று தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர்களுள் ஒருவரான நடிகர் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாளாகும். இதற்காக சிவாஜி குடும்பத்தினர், தமிழக அரசு மற்றும் நடிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சிவாஜி கணேசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு கமல் தனது ட்விட்டர் பதிவில், "நடிகர் திலகத்தின் நடிப்பைப் போல, அவரது மனித உடலும் சாகாவரம் பெற்றது என மற்ற அப்பாவி ரசிகர்களைப் போலத்தான் நானும் நம்பினேன்.

இவ்வளவு வருடங்கள் கழித்தும், அவர் மகன்களும், ரசிகர்களும், அவர் இல்லாமையை ஏற்றுக்கொள்ள இன்னமும் முயன்று வருகிறார்கள். நடிகர் திலகம் என்கிற அப்பாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார் கமல்.

சிவாஜி பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT