‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.
ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கடந்த வருடம் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் இவருக்கு வெளிச்சம் கிடைத்தது.
அத்துடன், ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ் கிடைத்தது. ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது, முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பது என சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. சமீபத்தில் கூட இவர் நடித்த ‘ஜாம்பி’ படம் ரிலீஸானது.
பொதுவாக, சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்களைச் சீண்டிப் பார்ப்பது சிலரின் வேலையாக இருக்கிறது. அப்படிச் சீண்டுபவர்களுக்குப் பதிலடி கொடுத்துவிடுகிறார் யாஷிகா ஆனந்த். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது...
“சினிமாவில் நடிப்பது போலத்தான் நிஜத்திலும் நடிகர்கள் இருப்பார்கள் என நினைக்கும் பழக்கம் இன்னும் இருக்கிறது. சினிமாவில் நான் கிளாமராக நடிப்பதால், என்னிடம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என அர்த்தம் கிடையாது. இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களிடம் பேசுவது எனக்குப் பிடிக்கும்.
சிலர், போலி கணக்கு மூலமாக வந்து தவறாக கமென்ட் செய்யும்போது கோபம் வந்துடும். அதுதான் அவர்கள் ஸ்டைலிலேயே பதிலடி கொடுக்கிறேன். அதுக்குப் பிறகு அவர்கள் வாலாட்ட மாட்டார்கள். பள்ளி நாட்களில் இருந்தே நான் இப்படித்தான். மற்றவர்கள் மனம் புண்படும்படி கிண்டல் செய்தால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
நிறைய சினிமா பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள் சமூல வலைதளங்களில் தங்களைப் பற்றி வரும் மீம்ஸ், ட்ரோல்களைப் பற்றிக் கண்டுகொள்வது இல்லை. அப்படி இருக்கக்கூடாது. உடனுக்குடன் சூடாக பதிலடி கொடுத்துவிட வேண்டும்.
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நான் நடித்தது கூட இப்படிப்பட்டச் சீண்டல்களுக்குக் காரணமாக இருக்கலாம். அந்தப் படத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். அதில் நடிக்க ஒப்புக்கொண்டது என்னுடைய தவறுதான்.
என்னிடம் கதை சொன்னபோது இல்லாத விஷயங்களையெல்லாம், ‘இப்படிப் பண்ணா நல்லாருக்கும், அப்படிப் பண்ணா நல்லாருக்கும்’ என்று சொல்லி படம்பிடித்தனர். படப்பிடிப்புத் தளத்தில் அதை என்னால் மறுக்கவும் முடியவில்லை. ஆனால், இனிமேல் இந்த மாதிரி தவறுகளைச் செய்ய மாட்டேன். கிளாமரைக் குறைத்துக்கொண்டு, நடிப்பை வெளிப்படுத்துகிற கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பேன்” என்றார் யாஷிகா ஆனந்த்.