'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அவமரியாதை ஏற்பட்டதா என்ற கேள்விக்கு இயக்குநர் சேரன் பதிலளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'பிக் பாஸ்' சீசன் 3. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி அவ்வப்போது சர்ச்சையாகி வருகிறது. நேற்று (செப்டம்பர் 29) தர்ஷன் வெளியேற்றப்பட்டார். அதற்குக் கூட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தர்ஷன் இறுதிப்போட்டி வரை போகக்கூடிய திறமை வாய்ந்தவர் எனப் பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், இயக்குநர் சேரன் போட்டியாளராக இருக்கும் போதும் சில சர்ச்சைகள் ஏற்பட்டன. அதற்கு இயக்குநர் அமீர், இயக்குநர் வசந்தபாலன் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் 'பிக் பாஸ்' போட்டியாளர்களுக்கு சேரன் யாரென்று தெரியவில்லை. அவரை உள்ளே அனுப்பி வைத்த விஜய் சேதுபதியே அவரை வெளியே அழைத்து வர வேண்டும் என்று கடுமையாகப் பேசியிருந்தார்கள்.
தற்போது 'பிக் பாஸ்' போட்டியிலிருந்து இயக்குநர் சேரன் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் வடபழனியில் உள்ள கமலா சினிமாஸ் திரையரங்கில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படம் பார்த்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அதில் "’பிக் பாஸ்’ வீட்டிற்குள் உங்களுக்கு அவமரியாதை ஏற்பட்டதா? உங்களுடைய சக இயக்குநர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து இருந்தார்களே" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சேரன், "91 நாட்கள் என்ன நடந்தது என்பதை இந்த உலகத்துக்கே காட்டியாச்சு. அதைத் தாண்டி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
'பிக் பாஸ்' என்பது ஒரு விளையாட்டு. அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். என்னுடைய நண்பர்கள் என் மீதான அன்பின் வெளிப்பாடாகத்தான் அவ்வாறு சொல்லியிருப்பார்கள். ஏன் இப்படிச் சொன்னீர்கள் என்று கேட்பதற்கான வாய்ப்பே இல்லை. அது என் மீதான மரியாதையாக எடுத்துக்கொள்வேன்.
எனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் கிடைத்தது அவமரியாதை கிடையாது. அந்தச் சூழலில் அவர்கள் என்னைப் புரிந்து கொண்ட விதம். ஆனால், போகப் போக எனக்கான மரியாதையை அவர்கள் கொடுக்க ஆரம்பித்ததுதான் என் வெற்றியாக நினைக்கிறேன். அங்கிருந்து வெளியேறும்போது நல்ல பெயருடன்தான் வந்தேன். எந்தவொரு இடத்திலுமே அவமரியாதை ஏற்பட்டதாகப் பார்க்கவில்லை.
இங்கு திரையுலகில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என இரண்டு ஜாம்பவான்கள் இருந்தார்கள். எம்.ஜி.ஆரைப் பிடித்தவர்களுக்கு சிவாஜியைப் பிடிக்காது. அது அவமரியாதை என்று சொல்ல முடியாது. அதே போலத் தான் சிவாஜியைப் பிடித்தவர்களுக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது. இங்கு பார்ப்பவர்களின் கண்ணோட்டம் தான் முக்கியம். இங்கு காலம் தாழ்ந்து அவமரியாதைகள் கூட மரியாதைகளாக மாறும்" என்று பதிலளித்தார் இயக்குநர் சேரன்.