மகராசன் மோகன்
ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானிசங்கர் என புதிய காம்போவில் ‘களத்தில் சந்திப்போம்’ என்ற கலகலப்பான படத்தை இயக்கி முடித்துள்ளார் என்.ராஜசேகர். சூப்பர்குட் பிலிம்ஸின் 90-வது படமாக வெளிவரும் இப்படம் குறித்து இயக்குநர் ராஜசேகருடன் ஒரு நேர்காணல்..
‘களத்தில் சந்திப்போம்’ விளையாட்டு துறை சார்ந்த படம்தானே?
விளையாட்டுக்கும், இதன் களத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.நேர் எதிரான இரு கதாநாயக கதாபாத்திரங்களைக் கொண்டு உருவான களம். நட்பு, ஆக்ஷன், காமெடி, காதல், சென்டிமென்ட் கலந்த கலவையாக இருக்கும். கமர்ஷியலாக ஒரு தலைப்பு யோசித்தோம். அவ்வளவுதான்.
‘ஃபிரெண்ட்ஸ்’, ‘நட்புக்காக’, ‘நண்பன்’ என நட்பைக் கொண்டாடும் படங்கள் நிறைய வந்துள்ளதே?
கமல், ரஜினி இருவரும் நண்பர்கள்தான். ஆனாலும் ஸ்டைல் வேறு வேறு. எதிரெதிர் துருவங்களாக நிற்கும் இருவர் இடையே ஒரு முடிச்சு இருந்தால் எப்படி இருக்கும்.. அதுபோன்றவைதான் இந்த கதாபாத்திரங்கள்.
இயக்குநர் எழில் உதவியாளர் நீங்கள். முதல் படம் ‘மாப்ள சிங்கம்’. அந்த முத்திரை, பாணி இப்படத்திலும் வெளிப்படுவதுபோல தெரிகிறதே?
ஐ.டி., கல்லூரி பின்னணியில் நான் எடுக்க நினைத்த எனது முதல்படமே வேறு. அதை தொட்டிருந்தால் இந்த கேள்வியே இல்லை. அதனால்தான் எல்லோரும், ‘ரஜினி முருகன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மாப்ள சிங்கம்’ என ஒப்பிடுகின்றனர். இது எதார்த்த வாழ்வியலை பிரதிபலிக்கும் கமர்ஷியல் படம்.
ஜீவா, அருள்நிதி கூட்டணி பற்றி..
ஒரு தனி ஹீரோ கதையுடன் முதலில் ஜீவாவைதான் சந்தித்தேன். அந்த சந்திப்பு அப்படியே வளர்ந்து, அப்போது கொடைக்கானலில் இருந்த அவரது அப்பாஆர்.பி.சவுத்ரி வரை போய்விட்டது.அங்கு போய், அவரிடம் சொன்னதுதான் இந்த ரெண்டு ஹீரோ கதை. இதில் ஜீவாவுடன் இன்னொரு கதாநாயக பாத்திரத்தில் நடிக்க அருள்நிதியிடம் கேளுங்க என்றும் அவர்களே கூறினர். ‘ஜீவா மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸுக்காக கதை கேட்கிறேன்’ என்று அமர்ந்த அருள்நிதியிடம், கதை கூறி முடித்தேன். ‘‘அவங்களுக்காகத்தான் பண்றேன். ஆனாலும், இந்த கதை பிடிச்சிருக்கு’’ என்றார்.
மஞ்சிமா, பிரியா பங்களிப்பு குறித்து..
இரு ஹீரோக்கள் இடையே பிரச்சினையே ஹீரோயின்களால்தான். அதனாலேயே இவர்களது முக்கியத்துவம் படத்தில் பிரதானமாக இருக்கும். தேவையற்ற பாடல்கள், சண்டைகள் இல்லாததால் இரு ஜோடிகளும் வரும் இடங்கள் கலகலப்பாக இருக்கும்.
நிறைய கதாபாத்திரங்கள் கொண்ட பெரிய நடிகர்களின் படங்களுக்கு திரைக்கதை வலுவாக இருப்பதில்லை என்ற விமர்சனம் இருக்கிறதே?
ஒரு படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருப்பது, இயக்குநருக்கு மட்டுமின்றி, படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் பாசிடிவ் அனுபவமாகத்தான் இருக்கும். நிறைய பேர் நடிக்கும் படத்தில், நமக்கு முக்கியத்துவம் இருக்குமா? என்று சில நடிகர்கள் யோசிப்பார்கள். கதையை சரியாக விளக்கிச் சொன்னால், அந்த பிரச்சினையும் சரியாகிவிடும். சரியான திட்டமிடல், திரைக்கதை வடிவமைப்பு, கதை சொல்லும் விதம் ஆகியவை தெளிவாக நகரும்பட்சத்தில், பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் இருந்தாலும் படம் நிச்சயம் தோற்காது!