தமிழ் சினிமா

’சுவரில்லாத சித்திரங்கள்’, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’, ’மாந்தோப்புக் கிளியே’ - ஒரே வருடத்தில் மூன்று ஹிட் படங்கள்

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி

79ம் ஆண்டில், ஏகப்பட்ட படங்கள், வெற்றிப் படங்களாக அமைந்தன. பாக்யராஜின் ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ஸ்ரீதரின் ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’, எம்..காஜாவின் ‘மாந்தோப்புக்கிளியே’ என மூன்று படங்களும் மூன்று விதமாக இருந்தன. மூன்றும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.

79ம் ஆண்டில், கமலுக்கு ‘கல்யாணராமன்’ உள்ளிட்ட படங்கள் வந்து ஹிட்டடித்தன. ரஜினிக்கு ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ முதலான படங்கள் வெற்றியைக் கொடுத்தன.

இதே வருடத்தில், மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படம் வந்து தமிழ்த் திரையுலகையும் ரசிகர்களையும் உலுக்கியெடுத்தது. 79ம் வருடத்தில்தான், பாலுமகேந்திரா தமிழில் முதல் படமாக ‘அழியாத கோலங்கள்’ படத்தை இயக்கினார்.

79ம் ஆண்டு ஸ்ரீதர், ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தை இயக்கினார். ஜெய்கணேஷ், விஜயகுமார், லதா, சுபாஷிணி முதலானோர் நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார். ‘அபிஷேக நேரத்தில்’, ‘குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை’, ‘நானே நானா யாரோதானா’ என்ற பாடல்களெல்லாம் இன்றைய இரவு வரைக்கும் நீண்டு மனதை இதப்படுத்தி வருகின்றன.

இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கினார். இந்தப் படம் 79ல் தான் வெளியானது. சுதாகர், பாக்யராஜ், சுமதி, கவுண்டமணி முதலானோர் நடித்திருந்தனர்.

இயக்குநர் எம்..காஜா, சுதாகரை வைத்து ‘மாந்தோப்புக் கிளியே’ படத்தை இயக்கினார். சங்கர் கணேஷ் இசையில் எல்லாப் பாடல்களும் வெற்றியைப் பெற்றன. முணுமுணுக்க வைத்தன. சுதாகர், தீபா முதலானோர் நடித்திருந்தாலும் ‘மாந்தோப்புக் கிளியே’ என்றதும் நம் நினைவுக்கு வருபவர்கள், சுருளிராஜனும் காந்திமதியும் செய்த காமடி, அதகளம் பண்ணியது. இந்தப் படத்தின் கதை வசன ஒலிச்சித்திரம், அப்போது வெகு பிரபலம். கஞ்சத்தனம் பண்ணும் சுருளிராஜன், கஞ்சத்தனமே இல்லாமல் காமெடியை வழங்கியிருந்தார்.

அதேபோல், ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். ‘காதல் வைபோகமே’ பாடல் எவர்கிரீன் ஹிட். இந்தப் பாடலை, கடந்த சில வருடங்களுக்கு முன்பு வந்த படத்தில் கூட ரீமிக்ஸ் செய்தார்கள். அந்த அளவுக்கு இந்தப் பாடல் செம ஹிட்டு.

சுவரில்லாத சித்திரங்கள்’ படம் குறித்து கே.பாக்யராஜ் தெரிவித்ததாவது:

இந்தப் படத்தின் கதை, எங்கள் ஊரில் இருந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய கதைதான் அது. அந்தக் குடும்பத்தின் கஷ்டம், ஊரில் உள்ள பலராலும் பேசப்பட்டது. அதைத்தான் அந்தப் படத்தில் வைத்திருந்தேன்.

இதேபோல், இந்தப் படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். கவுண்டமணி டெய்லர் காளியண்ணனாக நடித்தார். எங்கள் ஊரில், காளியண்ணன் என்று ஒரு டெய்லர் இருந்தார். அவர் டபுள் மீனிங்கில் வெளுத்து வாங்குவார். அவருடைய டெய்லர் கடையில்தான் இருப்பேன். செம ஜாலியான ஆள். அவருடைய பேச்சு யாருக்கும் கோபத்தைத் தராது. அவர் மீது எவ்வளவு கோபமாக இருந்தாலும் அவர் பேசினால், சட்டென்று சிரித்துவிடுவார்கள். பெண்களே கூட ரசித்துச் சிரித்துவிடுவார்கள்.

இவ்வாறு கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

ஆக, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ எனும் சிட்டி சப்ஜெக்ட், ‘சுவரில்லாத சித்திரங்கள்’ எனும் சிட்டியாகவும் இல்லாமல் கிராமமாகவும் இல்லாமல் சிறிய ஊரில் உள்ள சப்ஜெக்ட், ’மாந்தோப்புக் கிளியே’ என்று கிராமத்து சப்ஜெக்ட் என மூன்று விதமான படங்களும் வெற்றியைப் பெற்றன.

SCROLL FOR NEXT