தமிழ் சினிமா

காமராசருக்குப் பிறகு, இன்றுதான் இந்தியாவுக்கு ஒரு தலைவர் கிடைத்திருக்கிறார்: மோடி குறித்து கஸ்தூரிராஜா பேச்சு

செய்திப்பிரிவு

கோவை

காமராசருக்குப் பிறகு, இன்றுதான் இந்தியாவுக்கு ஒரு தலைவர் கிடைத்திருக்கிறார் என்று பிரதமர் மோடி குறித்து கஸ்தூரிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில் நடத்தப்பட்ட குறும்படப் போட்டிகள் பரிசுகள் வழங்கும் விழா கோவையில் இன்று நடைபெற்றது.

இதில் இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜா கலந்துகொண்டு பேசினார். அவர் கூறும்போது, ''அணுகுமுறை, நடை, உடை, பாவனை, பேச்சு ஆகியவை நம்மைக் கதாநாயகனாக மாற்றுகின்றன. இன்று இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்தத் தலைவர்களின் பட்டியலை எடுங்கள். காமராசருக்குப் பிறகு, இன்றுதான் இந்தியாவுக்கு ஒரு தலைவர் கிடைத்திருக்கிறார். உலக நாடுகள் அனைத்தும் இந்தியா பெயரையே முதலில், பயத்துடன் உச்சரிக்கின்றன.

அமெரிக்காவில் பிரதமர் பேசும்போது வல்லரசு நாட்டின் அதிபர், குழந்தை போல கேட்டுக்கொண்டிருக்கிறார். பயம் வந்துவிட்டது. இன்று எந்த விஷயத்திலும் இந்தியாவை அசைக்க முடியாது. பாதி இந்தியாவே சிலர் பேரில்தான் இருக்கிறது.

மாணவர்களிடம் இருந்துதான் சீர்திருத்தங்கள் அரங்கேற வேண்டும். அவர்களால்தான் இந்தியாவை மாற்றியமைக்க முடியும். நம்முடைய விஞ்ஞான வளர்ச்சியும் மோடியின் அறிவுப் புகழும் எனக்குத் தெரியவில்லை. என் குழந்தைகள்தான் எனக்குத் தெரியப்படுத்தினர்.

நீங்களும் உங்களின் பெற்றோரிடம் சென்று, மோடியைக் குறித்துப் பேசுங்கள். இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்று தெரியப்படுத்துங்கள். தமிழ்நாட்டில் இப்போது மாற்றம் வரவில்லையெனில், எந்த ஜென்மத்திலும் வராது'' என்று தெரிவித்தார் கஸ்தூரிராஜா.

இதே விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை எனவும் பிரதமர் மோடி பேச்சுகளின் மொழிமாற்ற உரிமையை வாங்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT