தமிழ் சினிமா

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதன் பின்னணி

செய்திப்பிரிவு

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

'பிகில்' படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். இதன் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் தொடங்கவுள்ளது. இதற்காக விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாயகியாக கியாரா அத்வானி, வில்லனாக விஜய் சேதுபதி, முக்கியக் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மிகக் குறைந்த நாட்களே இருப்பதால் அதற்கு எப்படி தேதிகள் ஒதுக்குவது என்ற குழப்பத்தில் முன்னணி நடிகர்கள் சிலர் இருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு என பல்வேறு படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, இந்தப் படத்திலும் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுவும் விரைவில் முடிவுக்கு வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று தெரிவித்தார்கள்.

இவ்வளவு படங்களுக்கு இடையில், எப்படி விஜய் படத்துக்கு விஜய் சேதுபதி தேதிகள் ஒதுக்கினார் என்று பலருமே ஆச்சரியப்பட்டார்கள்.

இது குறித்து விசாரித்தபோது, '' 'தளபதி 64' படத்தில் ஜெகதீஷ் மற்றும் லலித் குமார் இருவரும் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணிபுரியவுள்ளனர். இதில் லலித் குமார் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ள படம் 'துக்ளக் தர்பார்'. புதுமுக இயக்குநர் தில்லி பிரசாத் தீனதயாளன் இயக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இதற்காக விஜய் சேதுபதி ஒதுக்கிய தேதியை அப்படியே 'தளபதி 64' படத்துக்காக மாற்றியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் 'துக்ளக் தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் தள்ளிப் போக வாய்ப்புள்ளது.

'தளபதி 64' படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் என்பதால், தன் படத்துக்கான தேதிகளை விட்டுக் கொடுத்துள்ளார் லலித் குமார். இதனாலேயே விஜய் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது சாத்தியமாகியுள்ளது.

SCROLL FOR NEXT