தமிழ் சினிமா

'மர்ஜாவன்' ட்ரெய்லரில் 'விஸ்வாசம்' பின்னணி இசை: இமான் வருத்தம்

செய்திப்பிரிவு

'மர்ஜாவன்' ட்ரெய்லரில் 'விஸ்வாசம்' பின்னணி இசை பயன்படுத்தப்பட்டு இருப்பது குறித்து இமான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மிலாப் ஜவேரி இயக்கத்தில் ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்திப் படம் 'மர்ஜாவன்'. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் இன்று (செப்டம்பர் 26) காலை வெளியிடப்பட்டது. தற்போது யூ டியூப் பக்கத்தில் முதல் இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த ட்ரெய்லர் பார்த்த அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் பின்னணி இசை அப்படியே இந்த ட்ரெய்லரின் இறுதியில் வரும் காட்சிகளுக்கு பயன்படுத்தி இருந்தார்கள். இந்தப் பின்னணி இசை 'விஸ்வாசம்' படத்தில் அஜித் அறிமுகமாகும் காட்சியில் வரும் என்பது நினைவுகூரத்தக்கது.

இந்த ட்ரெய்லரில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில், 'விஸ்வாசம்' படத்தின் இசையமைப்பாளர் இமான் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இமான் தனது ட்விட்டர் பதிவில், " ‘மர்ஜாவன்’ இந்திப் படத்தின் ட்ரெய்லரில் ’விஸ்வாசம்’ படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது. தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து, இசை உரிமை பெற்றுள்ள நிறுவனத்திடமிருந்தோ முன்கூட்டியே எதுவும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார் இமான்.

SCROLL FOR NEXT