'சூரரைப் போற்று' படக்குழுவினர் அனைவருக்கும் தங்கக் காசுகளைப் பரிசளித்துள்ளார் சூர்யா.
'என்.ஜி.கே' படப்பிடிப்புக்கு இடையே சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் 'சூரரைப் போற்று' படத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கினார் சூர்யா. நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. டெல்லியில் சில முக்கிய சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதுரையில் பிரதான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்தப் படப்பிடிப்பு மட்டும் சுமார் 40 நாட்கள் வரை நீடித்து வந்தது.
தற்போது ஒட்டுமொத்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. இன்னும் 3 நாட்கள் சிறுசிறு காட்சிகள் மட்டுமே எடுக்கப்படவுள்ளன. படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், படக்குழுவினர் அனைவருக்கும் தங்கக் காசுகளைப் பரிசாக அளித்துள்ளார் சூர்யா. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையைத் தழுவியே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் இணைந்து குனித் மோங்காவும் தயாரித்து வருகிறார்.