நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், சர்வதேச நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இது குறித்து மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார்.
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சிறு வயதிலிருந்தே பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றவர். கடந்த வருடம் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் வேதாந்த் வெண்கலப் பதக்கம் வென்றார். தேசிய அளவிலான முதல் நீச்சல் போட்டியில் வேதாந்த் தங்கம் வென்றார்.
தொடர்ந்து மகனின் திறமையை ஊக்குவித்து வரும் மாதவன், இம்முறை ஏசியன் ஏஜ் க்ரூப் நீச்சல் போட்டியில் வேதாந்த் வெற்றி பெற்றுள்ளது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வேதாந்த், உத்கர்ஷ் பாடீல், சாஹில் லஸ்கர், ஷோஹன் கங்குலி என நால்வர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.
"ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. கடவுளின் அருள். இந்தியாவுக்காக கலந்துகொண்டு வேதாந்த் பெறும் முதல் அதிகாரபூர்வ பதக்கம் இது" என்று மாதவன் குறிப்பிட்டு, வேதாந்த் பதக்கம் பெறும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். பலரும் மாதவனுக்கும், அவர் மகனுக்கும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இதே போட்டியில் 4x100மீட்டர் ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ரிலே நீச்சல் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.