’அசுரன்’ படத்துக்குப் பேனர் வைக்காமல் நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு ரசிகர்களுக்கு தனுஷ் நற்பணி மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் நடந்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க, சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைத் தடுப்புகளிலும் வரிசையாகப் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. இதில் ஒரு பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்தது.
அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு உருவானது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் யாவும் இனி பேனர் வைக்க வேண்டாம் எனத் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டது.
விஜய்யும் 'பிகில்' இசை வெளியீட்டு விழாவுக்குப் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து எந்தவொரு பேனருமே இல்லாமல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அஜித் ரசிகர்கள் அவர்களாகவே முன்வந்து பேனர் வைக்கப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.
தற்போது தனுஷ் தலைமை நற்பணி மன்றம் சார்பில் ரசிகர்களுக்குப் பேனர் வைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், "அனைத்து மாவட்ட நகர, ஒன்றிய, கிளை, பகுதி நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம். தனுஷ் நடிப்பில் அக்டோபர் 4-ம் தேதி வெளியாக இருக்கும் 'அசுரன்' திரைப்படத்திற்கு கட் அவுட், பேனர் ஆகியவற்றை வைப்பதைத் தவிர்த்து அதற்குப் பதிலாக உங்களால் முடிந்த அளவு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுமாறு அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.