தமிழ் சினிமா

அருவருப்பான செயல்: பார்த்திபன் காட்டம்

செய்திப்பிரிவு

இணையத்தில் 'ஒத்த செருப்பு' படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது அருவருப்பான செயல் என்று பார்த்திபன் காட்டம் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் 'ஒத்த செருப்பு'. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.

இந்தப் படத்தை பல்வேறு வகைகளில் விளம்பரப்படுத்தி வருகிறார் பார்த்திபன். ஆனால், இந்தப் படமும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இணையங்களில் வெளியாகியுள்ளது. இதிலும் சிலர் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளனர்.

இது தொடர்பாக பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில், "'ஒத்த செருப்பு சைஸ் 7' இப்படிப்பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல். 'ஒத்த செருப்பு' பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கணும் என் 7-ம் அறிவை. இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயன்னு. திரையரங்கில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்யத் தூண்டுகிறது” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

மேலும், இந்தப் படம் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திப் படமான 'கல்லி பாய்' படத்தைப் பரிந்துரைத்துள்ளனர். இது தொடர்பான பார்த்திபன் "பாசக்கார ரசிகர்கள் தந்திருக்கும் பாராட்டே ஆஸ்கர் எனக்கு!" எனத் தனது போஸ்டர் விளம்பரங்களில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT