தயாரிப்பாளர் சங்கத்தில் கமல் மீது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகார் அளித்துள்ளார்.
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ஜெயராம், ஊர்வசி, மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், இயக்குநர் விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'உத்தம வில்லன்'. லிங்குசாமி வழங்க முதல் பிரதி அடிப்படையில் கமலே தயாரித்தார். இந்தப் பட வெளியீட்டின் போது பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியது லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ்.
அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், லிங்குசாமிக்கு உதவ முன்வந்தார் கமல். அதில் ஞானவேல்ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்குப் படம் பண்ணித் தருவது அல்லது அடுத்த பட வெளியீட்டின் போது கொடுத்துவிடுவது என ரூ.10 கோடியை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திடம் வாங்கியுள்ளார் கமல்.
ஆனால், 4 ஆண்டுகள் கடந்தும் இந்தப் பணத்துக்கு கமல் எந்தவொரு பதிலுமே கூறவில்லை. இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில் கமல் மீது புகார் மனு ஒன்றை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அளித்துள்ளார். அதில் தனக்கு கொடுக்க வேண்டிய கால்ஷீட் அல்லது பணம் இரண்டும் குறித்து கமல் இதுவரை எந்தவொரு பதிலுமே அளிக்காமல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் குழு இந்தப் புகார் தொடர்பாக கமல் மற்றும் ஞானவேல்ராஜா இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது . விரைவில் இது சுமுகமாகப் பேசித் தீர்க்கப்படும் என்று தெரிகிறது. கமல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதால் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்துக்காக ராஜமுந்திரியில் இருக்கிறார் கமல். வார இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக மட்டுமே சென்னை வந்து செல்கிறார். அந்தச் சமயத்தில் இப்பிரச்சினை நேரடியாகப் பேசித் தீர்க்கப்படும் எனத் தெரிகிறது.