'தலைவி' படத்தில் ஏன் கங்கனா நடிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ரசிகருக்கு, அவரது சகோதரி ரங்கோலி பதிலடிக் கொடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த உலகின் மிகவும் வயதான துப்பாக்கி சுடும் வீராங்கனைகளான சந்திரோ டோமா மற்றும் பிரகாஷி தோமரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் 'சாந்த் கி ஆங்க்'. துஷார் ஹிரானந்தானி இயக்கியுள்ள இந்தப் படத்தில் தாப்ஸி, பூமி பெட்நேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது. அதில் இளம் வயது நாயகிகள் எப்படி வயதானவர்களாக நடிக்கலாம், மேக்கப் வேறு சரியில்லை என்று பலரும் கேலி செய்யத் தொடங்கினர். இதனால் சர்ச்சை உருவானது. இதற்கு தாப்ஸி தனது ட்விட்டர் பதிவில் பதிலடிக் கொடுத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிக்க கங்கனாவிடம் கூடக் கேட்டார்கள். நீனா குப்தா மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தான் பரிந்துரைத்தோம் என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார் கங்கனாவின் சகோதரி ரங்கோலி சாந்தில். இந்தப் பதிவுக்கு சமூக வலைத்தள பயனர் ஒருவர் "அப்படியென்றால் கங்கனா ஏன் 'தலைவி' படத்தில் நடிக்க வேண்டும். நீனா குப்தாவே நடிக்கலாமே?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கங்கனாவின் சகோதரி ரங்கோலி, "கபடமில்லாத 16 வயதில் நடிக்கத் தொடங்கி, மிகப்பெரிய நட்சத்திரமாக உருமாறிய பின் பதற்றமான தமிழகத்தின் இளம் முதல்வராகப் பதவிக்கு வந்த ஒரு நடிகையின் கதாபாத்திரம் தான் ’தலைவி’. அவர் 39 வயதில் முதல்வரானவர். இங்குதான் இந்தப் படம் முடியம்.
மோசமாகப் பேசுவதற்குப் பதில் கங்கானாவைப் புரிந்து கொள்ளுங்கள். அவர் நிறையப் பணத்தையும், வாய்ப்புகளையும் இந்த சமூகத்துக்காக விட்டுக்கொடுத்துள்ளார். அவர் இந்த சமூகத்தின் மகள்களுக்காக, அம்மாக்களுக்காக, சகோதரிகளுக்காகச் செய்த தியாகத்தை மதியுங்கள்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
'சாந்த் கி ஆங்க்' படத்தின் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே படக்குழுவினருக்கு ஒருபுறம் வாழ்த்துகளும், மறுபுறம் எதிர்ப்பும் ஒரே சேர வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.