திரையுலகைக் கெடுத்துவிடாதீர்கள் என்று சமூக வலைதளப் பயனர்களுக்கு சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆரவ், ராதிகா, காவ்யா தாப்பர், நிகிஷா படேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மார்க்கெட் ராஜா MBBS'. சரண் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 24) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ராதிகாவுக்கு 'நடிகவேள் செல்வி' பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது படக்குழு.
இதில் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, இயக்குநர் ஆர்.பி.உதயகுமார், சரத்குமார், இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சரத்குமார் பேசும் போது, ராதிகா செய்த சாதனைகள் மற்றும் அவருக்குப் பத்மஸ்ரீ பட்டம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தன் பேச்சின் இறுதிக்கட்டமாக சமூக வலைதளப் பயனர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் சரத்குமார். அதில், “பல வேதனைகளோடு, துன்பங்களோடு தயாரிப்பாளர்கள் படத்தைத் தயாரிக்கிறார்கள். ஆகையால் திரையரங்கிற்குள் உட்கார்ந்தவுடன் செல்போனை ஆஃப் செய்துவிடுங்கள். ஏனென்றால், வெளியே டிக்கெட் எடுத்து படம் பார்க்க நிற்பவனிடம் "படம் நல்லாயில்ல டா உள்ளே வந்துவிடாதே" என்று சொல்லிவிடாதீர்கள் ப்ளீஸ்.
அவருக்குப் படம் எப்படி என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும். கஷ்டப்பட்டு படம் எடுக்கிறார்கள், நடிக்கிறார்கள். ஆகையால், திரையுலகைக் கெடுத்துவிடாதீர்கள். வீட்டிலிருக்கும் துக்கத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு உங்களைச் சந்தோஷப்படுத்துபவன் கலைஞன். 1000 வேதனைகள், கவலைகள் இருக்கும். ஆனால், ஒரு காமெடிk காட்சியில் நடித்துக் கொண்டிருப்பார்கள். அதை யாராலும் செய்ய முடியாது.
'சூரியன்' படத்தில் நான் நடித்தபோது உள்ள வெயிலில், கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களால் நிற்கக் கூட முடியாது. நான் முழுநாள் அந்த வெயிலில் நடித்தேன். நியூஸிலாந்தில் மைனஸ் பத்து டிகிரி கடும் குளரில் நடிகையை நடனமாடச் சொல்லி, ஃபேன் வேறு போட்டுவிடுவார்கள். அந்தக் குளரில் பாடல் வரிகளைக் கூடச் சொல்ல முடியாது. இவ்வளவு கஷ்டப்படுவது உங்களை மகிழ்விக்கத்தான்.
கலைஞர்களுக்கு ஒரு விஷயம். நடிகர்களோ, தயாரிப்பாளர்களோ யாருமே கடவுளுக்குப் பிறகு நாம்தான் என நினைக்காதீர்கள். சாமி கும்பிடப் போகும்போது கூட, ரசிகர்கள் வந்து செல்ஃபி எடுத்துக் கொள்கிறோம் என்பார்கள். ”சாமி கும்பிட்டு வந்துவிடுகிறேன், வெளியே நில்லுங்கள்” என்றால் கூட கேட்காமல் 'சாமி இங்கே தான் சார் இருக்கும். நீங்கள் வரமாட்டீர்கள்' என்பார்கள். ஆகையால், ரசிகர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை நடிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் இருக்க வேண்டும்” என்று பேசினார் சரத்குமார்.