'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் விவேக் பேசிய கருத்துகளுக்கு சிவாஜி ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். 'பிகில்' படத்தில் நீண்ட நாட்கள் கழித்து விஜய்யுடன் மீண்டும் நடித்துள்ளார் விவேக். அவரும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அதில் "சிவாஜி நடிப்பில் ’இரும்புத்திரை’ என்ற படம் வெளியானது. அதில் ஒரு பாடல் 'என் நெஞ்சில் குடியிருக்கும்' என்று ஆரம்பிக்கும். ஆனால் அந்தக் காலத்தில் இப்பாடலுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அந்த வசனம் தற்போது நடிகர் விஜய்யால் பிரபலமாகியுள்ளது" என்று பேசினார் விவேக்.
இதற்கு சிவாஜி சமூகநலப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:
’பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக், 1960-ம் ஆண்டு வெளிவந்த சிவாஜி - வைஜெயந்தி மாலா நடித்த 'இரும்புத்திரை' படத்தின் 'நெஞ்சில் குடியிருக்கும்' என்று தொடங்கும் அருமையான பாடலைக் கிண்டலடித்திருக்கிறார்.
மேடை கிடைத்துவிட்டால், கூட்டத்தைப் பார்த்துவிட்டால் சிலர் உளற ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வரிசையில் நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். எந்த நடிகரை வேண்டுமானாலும் தூக்கி வைத்துக் கொண்டாடுங்கள், எந்த இசையமைப்பாளர் அல்லது பாடலை வேண்டுமானால் பாராட்டுங்கள் தவறில்லை. ஆனால், ஒரு நடிகரைக் காக்காய் பிடிப்பதற்காக ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ஒரு பாடலைக் கிண்டலடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏதோ இப்போது தான் அந்தப் பாடல் மக்களுக்கே தெரிய வருவது போலக் கூறியுள்ளார். 'நெஞ்சில் குடியிருக்கும்' என்ற 1960-ல் வெளிவந்த பாடல் மிகவும் வரவேற்பைப் பெறவில்லை என்றால் ஏன் அதே டியூனை மீண்டும் பயன்படுத்த வேண்டும் எனக் கூறத் தயாரா? டியூனுக்கு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக, பிரபலமான டியூன் என்பதாலேயே அதனைக் காப்பியடித்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் பேசியிருக்கிறார் விவேக்.
ஏற்கெனவே ஒரு திரைப்படத்தில் 'பராசக்தி' படத்தில் வரும் நீதிமன்றக் காட்சி வசனத்தைப் பேசிக் கிண்டலடித்திருந்தார் விவேக்.
இப்போது சிவாஜியின் அருமையான பாடலைப் பொது மேடையில் விவேக் கிண்டலடித்திருக்கிறார். இது போலத் தொடர்ந்து செய்தால், அவருக்கெதிராக ரசிகர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறோம்''.
இவ்வாறு சிவாஜி சமூக நலப்பேரவை தெரிவித்துள்ளது.