‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை விமர்சித்துள்ளார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.
ராஜா கஜினி தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘உற்றான்’. ஒரு சிறிய ஸ்க்ரு, கல்லூரி மாணவன் ஒருவனின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதுதான் படம். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஹீரோவாக ரோஷணும், ஹீரோயினாக ஹிரோஷினியும் நடித்துள்ளனர். ‘வெயில்’ படத்தில் நடித்த பிரியங்கா, இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று (செப்டம்பர் 23) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “தமிழில் தலைப்பு வைத்ததற்காகவே இந்தப் படத்தின் இயக்குநரைப் பாராட்ட வேண்டும். ‘தமிழைக் காப்பாற்றப் போகிறேன்’, ‘நான் தமிழன்’, ‘தமிழ்நாடு நல்லாருக்கணும்’ என்று சொல்கிறவர்கள் வைக்கும் படத்தின் தலைப்பு அசிங்கமாக இருக்கிறது. பெரிய படங்களுக்கு வைக்கிற தலைப்புகளைப் பார்த்தீங்கன்னா...
கலைஞர், ஜெயலலிதா காலத்தில் தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு அளித்தனர். வரிவிலக்குக்காக மட்டுமே தமிழை நேசிப்பவர்களாக நாம் இருக்கக்கூடாது. தமிழர்களுக்காகப் போராடுகிறவர்கள், தமிழைப் பற்றிப் பேசி புகழ்பெற வேண்டும் என்று நினைப்பவர்கள்...
பேசாத ஹீரோக்கள் எல்லாம் இன்றைக்கு மேடையில் அதிகமாகப் பேசத் தொடங்கிவிட்டனர். எனக்கு ஒண்ணும் புரியல. ரொம்ப அமைதியா இருப்பாரேப்பா... அவர் ஜாஸ்தி பேசுறாரே... எதுவும் விஷயம் இருக்குதா? என்று யோசித்தேன். படத்தின் தலைப்பை முதல்ல தமிழ்ல வைங்க. ‘அந்த’ப் படத்தின் தலைப்புக்கு அர்த்தம் என்ன என்று நேற்று முழுவதும் நிகண்டுவில் தேடினேன். அது தமிழ் வார்த்தையே இல்லை எனத் தெரிந்தது. நான் எந்தப் படத்தைச் சொல்கிறேன் எனக் குறிப்பிடவில்லை.
சினிமாவில் ஆயிரத்தெட்டு வசனங்கள் எழுதிக் கொடுக்கலாம். அதை ஒரு ஹீரோ பேசிவிடலாம். ஆனால், மேடைக்கு வரும்போது எதார்த்தமாக இருக்க வேண்டும். ரஜினி மேடையில் எதார்த்தமாகத்தான் பேசுவார். எனவே, நாம் எல்லோரும் மேடையில் எதார்த்தமாகவே இருக்க வேண்டும். மேடைகளில் பஞ்ச் டயலாக் தேவையில்லை” எனப் பேசினார்.
ஆர்.வி.உதயகுமாரின் இந்தப் பேச்சு, ‘பிகில்’ படம் மற்றும் விஜய்யைப் பற்றியது என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.