தமிழ் சினிமா

மறக்க முடியாத முஸ்லிம் பெண்ணின் பாராட்டு: இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

'கடைக்குட்டி சிங்கம்' படத்துக்குக் கிடைத்த முஸ்லிம் பெண்ணின் பாராட்டு மறக்கவே முடியாது என்று இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பாண்டிராஜ், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு பண்ண, இமான் இசையமைத்துள்ளார்.

செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு பாண்டிராஜ் அளித்த பேட்டியில் "'கடைக்குட்டி சிங்கம்' படத்துக்குக் கிடைத்த பாராட்டுகளில் உங்களால் மறக்க முடியாதது எது?” என்ற கேள்வியை எழுப்பினோம்.

அதற்கு இயக்குநர் பாண்டிராஜ் கூறியதாவது:

''படம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்த்தேன். கார்த்தி சார் படங்கள், என் படங்கள் ஆகியவற்றில் அது தான் பெரிய வசூல் என்றெல்லாம் வரும் என எதிர்பார்க்கவில்லை. திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் எங்கள் திரையரங்கிற்கு வராதவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். 'பாகுபலி' படத்துக்குத்தான் இப்படி கூட்டம் கூட்டமாக வந்தார்கள் என்றார்கள். வீல் சேரில் எல்லாம் பெரியவர்கள் வந்து பார்த்தார்கள். நீங்கள் கூறியிருக்கும் உறவுகள் அந்த அளவுக்கு மக்களை ஈர்த்துள்ளது என்றார்கள். குடும்பத்துடன் திரும்பத் திரும்ப வந்து பார்த்திருக்கிறார்கள். அது உழைப்புக்கான வெற்றி.

மறக்க முடியாத பாராட்டு என்றால், பொள்ளாச்சியில் ஒரு மரம் நடுவிழாவுக்கு அழைத்திருந்தார்கள். அப்போது 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் 25-வது நாளுக்கு ஒரு திரையரங்கிற்கு அழைத்தார்கள். பலரும் மைக் பிடித்துப் பேசினார்கள். அப்போது படம் பார்க்க வந்த முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் பேசும் போது, "எங்க குடும்பம் எல்லாம் பெரிய குடும்பம். எல்லா படங்களையும் எங்களால் தியேட்டரில் பார்க்கவே முடியாது.

இந்த மாதிரி ஒரு குடும்பப் படம் வந்தால் தான், எங்களையெல்லாம் தியேட்டருக்கே அழைத்து வருகிறார்கள். இந்த வருஷத்தில் நாங்கள் தியேட்டரில் பார்க்கும் முதல் படம் இது தான். எங்களை எல்லாம் மனதில் வைத்துப் படமெடுத்தால் தான் நாங்கள் எல்லாம் தியேட்டருக்கு வர முடியும்" என்று பேசினார். அந்தப் பேச்சு அப்படியே என் மனதில் தங்கிவிட்டது. ஒவ்வொரு கதை எழுதும் போது அந்தப் பெண் பேசியது மனதில் வந்து போகும்''.

இவ்வாறு இயக்குநர் பாண்டிராஜ் பேசினார்.

SCROLL FOR NEXT