‘விஜய் பேச்சில் கொஞ்ச நாளா குசும்பும் சேர்ந்து வருது’ எனத் தெரிவித்துள்ளார் சாந்தனு பாக்யராஜ்.
விஜய் நடிப்பில் அட்லீ மூன்றாவது முறையாக இயக்கியுள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஹீரோயினாக நயன்தாரா நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 19-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு உரிமையை சன் டிவி பெற்றிருந்தது. எனவே, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு நேற்று (செப்டம்பர் 22) சன் டிவியில் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பானது.
இந்த இசை வெளியீட்டு விழாவைப் பார்த்து ரசிப்பதாக நிறைய பேர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, அதில் விஜய் பேசியது குறித்தும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். இந்நிலையில், நடிகர் சாந்தனு பாக்யராஜும் விஜய் பேச்சு குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
“அண்ணா பேசுன ஒவ்வொரு வார்த்தையும்... ரசிகர்களுக்கும், படத்தில் வேலைசெய்த ஒவ்வொரு நடிகர்/தொழிற்நுட்பக் கலைஞருக்கு மறக்காம நன்றி சொல்றதும்... இதன் காரணமாகத்தான் ‘தளபதி’ என்று அழைக்கப்படுகிறார். அவர் நேர்மையானவர், இன்ஸ்பிரேஷனும் கூட.
இப்போ கொஞ்ச நாளா குசும்பும் சேர்ந்து வருது. அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்தேன்” எனத் தெரிவித்துள்ளார் சாந்தனு.
விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு, இதற்கு முன்னரும் பலமுறை விஜய்யைப் புகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற தீபாவளிக்கு ‘பிகில்’ படம் ரிலீஸாகிறது.