‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் காட்டப்பட்ட மீம்ஸ் குறித்த விமர்சனத்துக்கு, பாடலாசிரியர் விவேக் பதில் அளித்துள்ளார்.
விஜய் நடிப்பில் அட்லீ மூன்றாவது முறையாக இயக்கியுள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஹீரோயினாக நயன்தாரா நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 19-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அதில், பாடலாசிரியர் விவேக் பேசும்போது திரையில் ஒரு மீம் காட்டப்பட்டது. அந்த மீமில், எம்.ஜி.ஆர். - வாலி, ரஜினி - வைரமுத்து, விஜய் - விவேக் என ஒப்பீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மீமை ட்விட்டரில் பகிர்ந்த ஒருவர், ‘தன்னைத்தானே பாராட்டிக்கொள்ள அசிங்கமா இல்லயா?’ என பாடலாசியர் விவேக்கைக் குறிப்பிட்டு, மரியாதைக்குறைவாகக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த விவேக், “இன்னும் 20 வருடங்கள் நல்லா எழுதிக்கிட்டே இருந்தாலும், அவங்களை மாதிரி என்னால ஆக முடியாதுனுதான் மேடையில் சொன்னேன். இது தன்னைத்தானே பாராட்டிக் கொள்வதா சகோ? புகைப்படத்தை மட்டும் பார்த்துவிட்டு கமென்ட் பண்றீங்க. அப்புறம்... நீங்கள் கேட்டதையே மரியாதையாகவும் கேட்கலாம் சகோ” எனத் தெரிவித்துள்ளார்.
‘பிகில்’ படத்தில் இருந்து முதலாவதாக ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியானதில் இருந்தே விவேக் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகிறது.