தமிழ் சினிமா

'ஒத்த செருப்பு' சொந்த வாழ்க்கை கதையல்ல: விமர்சகர்களுக்கு பார்த்திபன் விளக்கம்

செய்திப்பிரிவு

'ஒத்த செருப்பு' சொந்த வாழ்க்கைக் கதையல்ல என்று விமர்சகர்களுக்கு பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.

சுதர் இயக்கத்தில் சந்திரன், பார்த்திபன், சாட்னா டைடஸ், சாம்ஸ், டேனியல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்'. நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம், செப்டம்பர் 27-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. அதில் சாட்னா டைடஸ் தவிர்த்து மற்ற அனைவருமே கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில் தனது 'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றி குறித்தும், அதற்கான விமர்சனங்கள் குறித்தும் பேசினார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன்.

அவர் பேசும் போது, "தமிழ்நாடு முழுக்க திட்டம் போடாமல் ஒரு கூட்டம், நிறைய இருக்கைகளிலும் நிறையத் திரையரங்குகளிலும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. அது ரொம்பவே சந்தோஷம். 'ஒத்த செருப்பு' படத்தின் இந்தக் கூட்டத்துக்கு மொத்த காரணமும் பத்திரிகைகள்தான். பலரது விமர்சனங்கள் எனக்கு விமோசனங்களாக இருந்தன.

'ஒத்த செருப்பு' படத்தை வெளியிட ரொம்பவே கஷ்டப்பட்டேன். முதல் நாள் கூட்டமே இல்லை. 15-20 பேர் தான் இருந்தார்கள். நேற்று (செப்டம்பர் 21) தஞ்சாவூரில் 700 இருக்கைகள் கொண்ட திரையரங்கம் ஹவுஸ் ஃபுல். இன்று அப்படித்தான். 70% வரை இந்தப் படத்துக்குப் பெண்கள் வந்திருக்கிறார்கள். என்னோட விருப்பமும் பெண்கள் பார்க்க வேண்டும் என்பது தான். அது நிறைவேறியுள்ளது. இன்று நல்ல மழை என்பதால், நாளை என்னவாகும் என்ற பயம் வந்துள்ளது.

தமிழகம் மற்றும் உலகமெங்கும் இந்தப் படத்தை வெளியிட்டதால், என்னை ஒரு பெரிய விநியோகஸ்தராக 'ஒத்த செருப்பு' ஆக்கியுள்ளது. முதல் நாள் கூட்டம் இல்லாததால், ரொம்பவே சந்தோஷப்பட்டேன். ஏனென்றால் யாராவது இந்தப் படத்தை வாங்கியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று எண்ணினேன். இரண்டாம் நாள் கூட்டம் வந்தவுடன் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். ஏனென்றால் எல்லாம் உரிமையும் நம்மகிட்ட தானே இருக்கும் என எண்ணினேன்.

விமர்சனங்கள் எல்லாமே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு சிலர் மட்டும் கதையாக இது எனது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டதாகப் பதிவு பண்ணியிருந்தார்கள். அது ரொம்பவே வருத்தமான ஒரு விஷயம். என் குடும்பத்தில் எவ்விதப் பிரச்சினையுமின்றி ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறோம் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். என் இரண்டு பெண்களின் திருமணமும் அனைத்து குடும்பமும் இருந்து தான் நடந்தது.

இப்போது போய் ஒரு படம் எடுத்து, யாரையோ சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எனக்கு கிடையாது. ஒரு படம், அதன் கதை அதை என்னவாக பண்ணலாம் என்பது மட்டுமே எண்ணினேன். அப்படி விமர்சனத்தில் குறிப்பிட்ட நண்பர்களுக்கு ஒரே ஒரு விஷயம், அப்படியொரு விஷயமே இல்லை. தேவையில்லாமல் ஒரு குழப்பத்தைச் சொல்லிக் கஷ்டப்படுத்த வேண்டாம்" என்று பேசினார் இயக்குநர் பார்த்திபன்.

SCROLL FOR NEXT