தன் படங்களின் 2-ம் பாகம் வெளிவருமா என்ற கேள்விக்கு இயக்குநர் கே.வி.ஆனந்த் பதிலளித்துள்ளார்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சமுத்திரக்கனி, சயிஷா சைகல், ஆர்யா, பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'காப்பான்'. எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 20-ம் தேதி இந்தப் படம் வெளியானது.
இந்தப் படம் தொடர்பாக கே.வி.ஆனந்த் அளித்த பேட்டியில், ”'அயன்', ’கோ’ உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் ஏன் இயக்கவில்லை? ரீமேக் படங்களை இயக்குவீர்களா” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு இயக்குநர் கே.வி.ஆனந்த், "கண்டிப்பாக 2-ம் பாகம் பண்ண மாட்டேன். நான் ஒளிப்பதிவு பண்ண மற்றும் இயக்கிய படங்கள் ஏதேனும் டிவியில் போட்டால் 5 நிமிடத்துக்கு மேல் பார்க்கமாட்டேன்.
ஏனென்றால் அதிலிருக்கும் தப்பு தான் தெரியும். இதை இன்னும் இப்படிப் பண்ணியிருக்கலாமே எனத் தோன்றும். என் படங்கள் வெளியாகி முதல் காட்சி பார்த்த பிறகு, மறுபடியும் பார்த்ததே இல்லை. முடிந்து போன படத்துக்குள் மீண்டும் போக விரும்பவில்லை.
புதிய பிரச்சினைகளை வைத்து புதுப்படம் பண்ண வேண்டும் என்பது தான் எண்ணம். உலகத்தில் எதுவுமே எளிதாகக் கிடைத்துவிட்டால், அது வெற்றியே அல்ல. போராட்டத்துடன் கிடைப்பதே வெற்றி. அப்படி எனக்கு ஒவ்வொரு படமுமே போராட்டம் தான்.
ரீமேக் படங்களும் பண்ணமாட்டேன். வரும் காலங்களில் பணத் தேவைக்காகப் பண்ணலாமே தவிர, இப்போது வரை ஃபிரஷ்ஷாகவே இருக்கிறேன். ரீமேக், 2-ம் பாகம் பண்ணுகிறேன் என்றால் உழைப்பதற்குத் தயாராக இல்லை என்று அர்த்தம்” கே.வி.ஆனந்த் என்று தெரிவித்தார்.