பார்வையற்ற இளைஞரின் பாடல் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அவருக்குப் பாடும் வாய்ப்பு வழங்கியுள்ளதாக இமான் அறிவித்துள்ளார். இதனால் இமானுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ’விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டது. இமான் இசையமைத்த இந்தப் படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. யூ டியூப் பக்கத்தில் இந்தப் பாடல் 83 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
சமூக வலைதளத்தில் பாடல்கள் பாடி, அவை வைரலாகி திரையுலகில் பாடும் வாய்ப்பு கிடைப்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கொல்கத்தா ரனகாட் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் ரனா மொண்டால் என்ற ஆதரவற்ற பெண் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரின் 'ஏக் பயார் கா நக்மா ஹா' என்ற இந்திப் பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஹிமாஷ் ரேஷாமியா பாடும் வாய்ப்பை வழங்கினார்.
தற்போது, அதேபோன்று பார்வையற்ற ஒருவருக்குப் பாடும் வாய்ப்பு தமிழில் கிடைத்துள்ளது. 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற ’கண்ணான கண்ணே’ பாடலை பார்வையற்ற ஒருவர் பாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதற்கு பலதரப்பட்ட நபர்களும் இவர் இந்தப் பாடலை பாடும் போது மனம் ஏதோ செய்கிறது என்று தெரிவித்தனர்.
'கண்ணான கண்ணே' பாடலுக்கு இசையமைத்த இமான், "இவரது தொடர்பு எண் கிடைக்குமா ஆன்லைன் மக்களே" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அவர் பதிவிட்ட சில மணிநேரத்தில் சம்பந்தப்பட்ட பார்வையற்ற நபரிடம் பேசியுள்ளார் இமான். அதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவில் "தொடர்பு எண் கொடுத்து உதவியதற்கு நன்றி. அவரிடம் பேசிவிட்டேன். அவருக்கு விரைவில் பாடும் வாய்ப்பு வழங்கவுள்ளேன். கடவுள் அவருடன் இருந்து வளங்களைத் தரட்டும். திருமூர்த்திக்கு இனிமையான நாட்கள் காத்திருக்கின்றன " என்று தெரிவித்துள்ளார் இமான்.
திருமூர்த்திக்கு உடனடியாகப் பாடும் வாய்ப்பு வழங்கியதற்கு, இமானுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.