தமிழ் சினிமா

சிம்பு மீது வருத்தம்: இயக்குநர் பாண்டிராஜ்

செய்திப்பிரிவு

சிம்பு மீது வருத்தம் இருப்பதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்தார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பாரதிராஜா, சமுத்திரக்கனி, அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 27-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இமான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்த இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி அளித்தார். 'சிம்புவுக்கும் உங்களுக்குமான நட்பு தொடர்கிறதா? அவர் மீது மீண்டும் சர்ச்சைகள் தொடங்கியுள்ளதே...' என்ற கேள்விக்கு பாண்டிராஜ் பதில் அளிக்கையில், "நட்பு தொடருது. சில நாட்களுக்கு முன்பு பேசினார். 'கடைக்குட்டி சிங்கம்' படத்தைத் தாமதமாக இப்போது தான் பார்த்தேன். க்ளைமாக்ஸ் காட்சியில் பயங்கரமாக அழுதுட்டேன். நம்ம இப்படியொரு குடும்பத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையைக் கொடுத்துள்ளது’’ என்றார்.

''கண்டிப்பாக அப்படியொரு குடும்பத்துக்குள் உங்களை வைத்து ஒரு கதை பண்றேன் ஜி'' எனச் சொல்லியிருக்கேன்.

சிம்புவுக்கும் எனக்குமான நட்பு அப்படியே தான் இருக்கிறது. ஒரே ஒரு வருத்தம். அவருக்கான இடத்தில் அவர் இல்லையே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது” என்றார் இயக்குநர் பாண்டிராஜ்.

சிம்பு - பாண்டிராஜ் - நயன்தாரா இணைப்பில் வெளியான படம் 'இது நம்ம ஆளு'. அந்தப் படத்துக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT