சென்னை
பேனர் விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் தவறு செய்தவர்களை விட்டுவிட்டு பேனர் பிரிண்ட் செய்தவரைக் கைது செய்துள்ளனர் என 'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
'தெறி', 'மெர்சல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் 3-வது முறையாக விஜய் நடித்துள்ள படம் 'பிகில்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விவேக் பாடல்களை எழுதியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் கட்டாயம் ரசிகர்களுக்காக ஏதாவது பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்த நிலையில் அதற்கு ஏற்றார்போல் விஜய் பேசினார். அவரது பேச்சில் தனது ரசிகர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலின் வருத்தம் தெரிந்தது.
இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதாவது:
“வாழ்க்கை கூட கால்பந்து விளையாட்டு போலத்தான். நாம் கோல் போட முயற்சிப்போம், அதைத் தடுக்க ஒரு கூட்டமே வரும். நம் கூட இருப்பவனே கூட எதிரணிக்காக கோல் போடுவான். யாருடைய அடையாளத்தையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்குங்கள்.
வாழ்க்கையில் அவர்களை மாதிரி வர வேண்டும், இவர்களை மாதிரி வர வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள். அதற்குத்தான் அவர்களே இருக்கிறார்களே. நீங்கள் நீங்களாகவே வளருங்கள்.
விளையாட்டு மேம்பட வேண்டும் என்றால் அரசியலில் புகுந்து விளையாட வேண்டும். ஆனால், விளையாட்டில் அரசியல் பண்ணக்கூடாது. எதை யாரால் முடிக்க முடியும் என்று பார்த்து, அவரை எங்கே உட்கார வைக்க வேண்டும் எனத் திறமையை வைத்து முடிவு பண்ணுங்கள்.
பேனர் விபத்தில் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என் ஆறுதல். இது போன்ற சமூகப் பிரச்சினைக்கு ஹேஷ்டேக் போடுங்கள். சமூகப் பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள். இங்கு யாரைக் கைது செய்ய வேண்டுமோ, அவர்களை விட்டு விடுகிறார்கள். போஸ்டர் பிரிண்ட் பண்ண கடைக்காரனைக் கைது செய்கிறார்கள்.
எனது பேனர், கட் அவுட்டைக் கிழித்த போது ரசிகர்கள் வருத்தப்பட்ட அளவுக்கு நானும் வருத்தப்பட்டேன். என் புகைப்படத்தைக் கிழியுங்கள், உடையுங்கள். ஆனால், என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்.
என் ரசிகர்கள் கனவுகள், ஆசைகளுடன் பேனர் வைக்கிறார்கள். அதைக் கிழித்தால் கோபம் வருவது நியாயம் தான். அதற்காக அவர்கள் மீது கை வைக்காதீர்கள். இது என் வேண்டுகோள்”.
இவ்வாறு விஜய் பேசினார்.
விஜய் பேச்சில் வழக்கமான காரம் இருந்தது. பேச்சில் அரசியல் இருந்தது.