தமிழ் சினிமா

படம் தயாரிக்கிறேனா? - யோகி பாபு விளக்கம்

செய்திப்பிரிவு

படம் தயாரிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு நடிகர் யோகி பாபு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக நடிகர்களைப் பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக முதல் 5 இடங்களுக்குள் யோகி பாபுவின் பெயர் இருக்கும். ரஜினியுடன் 'தர்பார்', விஜய்யுடன் 'பிகில்', சிவகார்த்திகேயனுடன் 'ஹீரோ', 'நம்ம வீட்டுப் பிள்ளை', விஜய் சேதுபதியுடன் 'கடைசி விவசாயி' என யோகி பாபுவின் கால்ஷீட் டைரி எப்போதுமே ஃபுல் தான்.

மேலும், தற்போது கதையின் நாயகனாக 'மண்டேலா' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே 'சத்யம்' இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார். இதற்கான கதை விவாதம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தில் யோகி பாபு நடிப்பது மட்டுமன்றி தயாரிக்கவும் உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதனால் நடிகர்களிலிருந்து இன்னொரு தயாரிப்பாளர் என்று பலரும் அவருக்குத் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தச் செய்தி தொடர்பாக யோகி பாபுவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, "நமக்கு எப்போதுமே நடிப்பு தான். தயாரிப்பாளராக ஆகும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. நிஜத்தில் நம்ம படம் தயாரிக்க வேண்டும் என்று ஒரு நாள் கூட யோசித்ததில்லை. எப்படி இப்படி ஒரு செய்தி வெளியானது என்றே தெரியவில்லை" எனக் கூறினார்.

SCROLL FOR NEXT