'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பது விரைவில் தெரியவரும்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சூரரைப் போற்று'. 2டி நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் 80% படப்பிடிப்பு முடிவடைந்தது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு நிக்கத் பொம்மி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. பாலா மற்றும் ஹரி இருவருமே தங்களது கதைகளுடன் தயாராக இருக்கிறார்கள். இதில் ஹரி படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கவுள்ளது. பாலாவும் தனது கதையை எழுத்தாளர் ஜெயமோகனுடன் அமர்ந்து இறுதி செய்து வருகிறார்.
சூர்யாவுக்காகத் தயார் செய்த கதையில் வில்லனாக நடிக்க அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஹரி. ஆனால், அர்ஜுனோ இந்தப் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். மீண்டும் வில்லனாக நடிக்க விரும்பவில்லை எனக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாலா, ஹரி ஆகிய இரு இயக்குநர்களுமே தயாராக இருப்பதால், 'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து சூர்யா யாருக்கு கால்ஷீட் கொடுப்பார் என்ற குழப்பம் நீடிக்கிறது. டிசம்பரில் வெளியாகவுள்ள 'சூரரைப் போற்று' பணிகளை முடித்தவுடன்தான், சூர்யா யாரை டிக் செய்கிறார் என்பது தெரியவரும்.
என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்