‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கணா, அந்த லுக் டெஸ்ட்டுக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஏ.எல்.விஜய் இயக்கவுள்ள படம் ‘தலைவி’. இந்தப் படத்துக்காக ஜெ.வின் அண்ணன் மகன் தீபக்கிடம் தடையில்லாச் சான்றிதழை முறைப்படி வாங்கியுள்ளது படக்குழு.
இதில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடிக்கிறார். நான்கு விதமான தோற்றங்களில் அவர் நடிக்கவுள்ளார். அதில், உடல் எடை கூடிய தோற்றமும் ஒன்று. எனவே, அதற்காக உடல் எடையை அதிகரிக்க இருக்கிறார் கங்கணா.
ஜெ.வின் 16 வயதில் இருந்து ‘தலைவி’ படத்தின் கதை தொடங்குகிறது. இந்தப் படத்துக்காக ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்துடன் இணைந்து பணிபுரிந்துள்ளார் விஜய். தீபாவளிக்குப் பிறகு கர்நாடக மாநிலம் மைசூர் அருகே படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்துக்கு, தமிழ் மற்றும் தெலுங்கில் ‘தலைவி’ என்றும், இந்தியில் ‘ஜெயா’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால், எல்லா மொழியிலும் ஒரே தலைப்பாக இருக்கலாம், அப்போதுதான் மக்கள் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும் என கங்கணா கேட்டுக் கொண்டதால், தற்போது இந்தியிலும் ‘தலைவி’ என்றே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘ஹங்கர் கேம்ஸ்’, ‘கேப்டன் மார்வல்’, ‘ப்ளேட் ரன்னர் 2049’ ஆகிய படங்களில் பணியாற்றிய ஹாலிவு மேக்கப் கலைஞரான ஜேசன் காலின்ஸ், இந்தப் படத்தில் ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றுகிறார். எனவே, ஜெயலலிதா லுக் டெஸ்ட்டுக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்குச் சென்றுள்ளார் கங்கணா. அவருடன் இயக்குநர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினரும் சென்றுள்ளனர்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை, ‘த அயர்ன் லேடி’ என்ற பெயரில் இயக்குகிறார் பிரியதர்ஷினி. இதில், ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். மேலும், ஜெ. கதையை ரம்யா கிருஷ்ணனை வைத்து ‘குயின்’ என்ற வெப் சீரிஸை எடுத்துள்ளார் கெளதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.
என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்